- செய்திகள்

தி.மு.க.வை விமர்சிக்க விஜயகாந்த் தயங்குவது ஏன்?

 

‘‘டெல்லியில அவசர ஆலோசனை நடந்திருக்குங்கோ…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை தொடங்கி வைத்தார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘எந்தக் கட்சி விவகாரத்தை சொல்லுதீரு…?’’ என்று கேட்டார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘டெல்லி மேலிடத்தின் அழைப்பின்பேரில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் அவசரமா டெல்லிக்குப் போயிருக்கார்… அங்க, ராகுல் காந்தியோட நேத்து ஆலோசனை நடந்திருக்குங்கோ…
‘‘ஒவ்வொரு தேர்தலின்போதும், கூட்டணி கட்சிகளோட தொகுதி பேச்சுவார்த்தை நடத்துறதுக்காக காங்கிரஸ் கட்சியில ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கிறது வழக்கம்… வர்ற சட்டசபை தேர்தலுக்காக, முன்னணி தலைவர்களை கொண்ட குழுவை நியமிக்கப் போறாங்களாம்…
‘‘இந்த குழுவுக்கு, இளங்கோவனை தலைவரா நியமிக்க கூடாதுன்னு மற்ற கோஷ்டிகள் போர்க்கொடி தூக்கி இருக்காம்… இதன்மூலமா, எல்லா கோஷ்டிகளையும் அனுசரிச்சப் போறவரை குழு தலைவரா நியமிக்கணும்னு அவங்க கேட்கிறதுக்கு காரணம் இருக்குங்கோ…
‘‘தி.மு.க. 30 தொகுதிகளை ஒதுக்கித் தரும்னு காங்கிரஸ் தரப்புல எதிர்பார்க்கிறாங்க… இதுல, பாதிக்கு பாதி அதாவது 15 தொகுதிகள் வரை கைப்பற்ற மாநில தலைவர் திட்டமிட்டிருக்கார்… அவரோட திட்டத்தை முறியடிக்க, பொதுவான ஒருத்தர் தலைமையில ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்கணும்னு கேட்கிறாங்களாங்கோ… மேலிடம் என்ன செய்யுதுன்னு பொறுத்திருந்து  பார்ப்போம்…’’ என்று தகவலை கூறி முடித்தார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.

‘‘கட்டுப்பாடுகளை விதிச்சிருக்காராம் பா…’’ என்று அடுத்து பேச ஆரம்பித்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘எதைப் பத்தி சொல்றீங்கோ…?’’ என்று கேட்டார் நிருபர் அழகுமணி.
‘‘பா.ம.க. சார்புல நாளைக்கு சென்னை வண்டலூர்ல மாநாடு நடத்துறாங்க… சட்டசபை தேர்தல் நெருங்கிட்டதாலயும், சென்னையில முதல்முறையா நடத்துறதாலயும் கட்சித் தொண்டர்களை கட்டுப்பாட்டோட நடத்தணும்னு மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை உத்தரவு போட்டிருக்காம் பா…
‘‘காஞ்சிபுரத்துல அடுத்தடுத்த நாட்கள்ல நடந்த தே.மு.தி.க. தி.மு.க. மாநாடுகள்ல அந்தக் கட்சியினர் செயல்பாடுகளைப் பத்தின படங்கள் வெளியாச்சு… இதுபோல நடந்தா கட்சியை கடுமையாக விமர்சிப்பாங்கன்னுதான், பா.ம.க. தலைமை கட்டுப்பாடுகளை விதிச்சிருக்குன்னு சொல்றாங்க பா…
‘‘இந்த நிலைமையில, எங்க தலைமையை ஏத்துக்குற எந்தக் கட்சியோடவும் கூட்டணி வைக்க தயார்னு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமா அறிவிச்சிருக்கார்… விஜயகாந்த், தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திட்டார்னா, அன்புமணி தலைமையை ஏத்துக்கிட்டு பா.ஜ.க. தங்களோடு வரும்னு பா.ம.க. தரப்புல நம்பிக்கையா இருக்காங்க பா…’’ என்று முடித்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.

‘‘இரண்டாவது முறையா யூகத்தை கிளப்பி விட்டிருக்காரு வே…’’ என்று அடுத்து பேச ஆரம்பித்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘எதைப் பத்தி சொல்றீங்கோ சார்…?’’ என்று கேட்டார் நிருபர்  அழகுமணி.
‘‘காஞ்சிபுரம் மாநாட்டு, அ.தி.மு.க.வை கடுமையா விமர்சனம் செஞ்ச பிரேமலதா, தி.மு.க.வை பட்டும் படாம தாக்கிப் பேசினாங்க… விஜயகாந்த், தி.மு.க.வைப் பத்தி எதுவும் பேசலை… இதனால விஜயகாந்த், தி.மு.க.வோடு கூட்டணி சேரலாம்னு யூகங்கள் வெளியாச்சு வே…
‘‘இந்த நிலைமையில, ஆந்திரா சிறையில இருந்து தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பா விஜயகாந்த் நேத்து வெளியிட்ட அறிக்கை, மறுபடியும் யூகத்துக்கு காரணம் ஆகி இருக்கு வே…
‘‘அந்த அறிக்கையில, ‘தமிழர்களை விடுதலை செய்த விஷயத்துல ஜெயலலிதா,  அரசியல் ஆதாயம் தேடுவது சரியா’ன்னு விஜயகாந்த் கேள்வி எழுப்பி இருக்கார்.. அடுத்து, தி.மு.க. பெயரைக் குறிப்பிடாம, ‘அரசியல் ரீதியா ஆதாயம் தேடுற வகையில் பல கட்சிகள் தங்களுடைய வழக்கறிஞர்களின் முயற்சியாலதான் விடுவிக்கப்பட்டதா உரிமை கொண்டாடுறாங்க’ன்னு விஜயகாந்த் சொல்லி இருக்கார்…
‘‘அ.தி.மு.க.வை நேரடியாக குறை சொன்ன விஜயகாந்த், ‘கூட்டணி பேச்சுவார்த்தை முடிஞ்சதாலதான், தி.மு.க.வை பகிரங்கமா விமர்சிக்குறதை தவிர்க்கிறார்’னு, யூகங்கள் கிளப்பி இருக்கு வே…
‘‘அதோட, கட்சியினரிடம் நடத்துற நேர்காணல்ல, ‘தி.மு.க.வோடு கூட்டணி அமைச்சா, மக்கள் ஏத்துப்பாங்களா’ன்னு விஜயகாந்த் கேட்கிறாராம்… கட்சி நிர்வாகிகள்ல 90 சதவிகிதம் பேர் தி.மு.க.வுக்கு ஆதரவா கருத்து சொல்லி இருக்கிறதை, அவர் புறக்கணிச்சிட மாட்டர்னும் சொல்றாங்க வே…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை நிறைவு செய்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.**

Leave a Reply