- அரசியல் செய்திகள்

தி.மு.க. விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது

தி.மு.க.வில் வினியோகிக்கப்பட்ட விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. 8-வது நாளான நேற்று துரைமுருகன், கே.என்.நேரு உள்பட முக்கிய நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனு வாங்கி தாக்கல் செய்து வருகின்றனர். குறிப்பாக கொளத்தூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிட கட்சி நிர்வாகிகள் பலர் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் சுபமுகூர்த்த தினமான 8-வது நாள் விருப்ப மனு வாங்கவும், அதனை தாக்கல் செய்யவும் தி.மு.க.வினர் ஆர்வம் காட்டினர். இதனால் அண்ணா அறிவாலய வளாகமே தி.மு.க. கட்சியினரால் நிறைந்திருந்தது. மனு தாக்கல் செய்யும் இடத்தில் நிற்கமுடியாத அளவுக்கு கூட்டம் காணப்பட்டது.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி, ஒருபோதும் கருத்துக்கணிப்பை நான் நம்பியது கிடையாது. தேர்தல் களம் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply