- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 30-
தி.மு.க. கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, தி.மு.க.தலைவர் கருணாநிதி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
பெருந்தலைவர் மக்கள் கட்சி–
தி.மு.க. கூட்டணியில், பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த சட்டசபை தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலினை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்தித்து தொகுதி ஒதுக்கீடு பற்றி பேச்சு நடத்தினார்.
இதையடுத்து என்.ஆர்.தனபாலன் கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
பின்னர் என்.ஆர். தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:–-
1 தொகுதி ஒதுக்கீடு
நடக்க உள்ள சட்டசபை  தேர்தலில் 5 தொகுதிகள் கேட்டு இருந்தோம். ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றும் உள்ளாட்சி மற்றும் வாரிய தலைவர் தேர்வின்போது பிரதிநிதித்துவம் கொடுப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு ஒரு தொகுதிக்கான உடன்பாட்டில் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்து இட்டுள்ளோம்.
இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறினார்.
பொன்.குமாருக்கு ஒரு தொகுதி
இதேபோல தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பொன்.குமாரின் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சிக்கும் ஒரு தொகுதி நேற்று ஒதுக்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தபின் பொன்.குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தி.மு.க. கூட்டணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத அரசை அகற்றி தி.மு.க. தலைமையில் புதிய ஆட்சி அமையும். இந்த தேர்தலில் 180 தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும்’’ என்றார்.
இந்த தொகுதி உடன்பாடு குறித்து தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–-
எவை-எவை?
தமிழகத்தில் நடைபெறும் 15–-வது சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.கவும், பெருந்தலைவர் மக்கள் கட்சியும் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில் –தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உதயசூரியின் சின்னத்தில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் என்பது மற்றத் தோழமைக் கட்சிகளோடு பேசி முடிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply