- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடா?

சென்னை, ஏப்.1-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், அது தொடர்பாக கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தி.மு.க. கூட்டணி
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனது தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க முயற்சி செய்கிறது. இதையொட்டி சிறிய கட்சிகளுடன் தி.மு.க. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு ஏற்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, உள்பட 5 கட்சிகளுக்கு தொகுதிகளையும் ஒதுக்கி உள்ளது. ஆனால் முதலில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி அறிவிப்போடு இருக்கிறது. இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளை தற்போதும் காங்கிரஸ் கேட்கிறதாம். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்று தனி கட்சி தொடங்கி விட்டதால் காங்கிரசுக்கு 25 முதல் 30 தொகுதிகள் கொடுக்க தி.மு.க. திட்டமிட்டு வருகிறதாம்.
கருணாநிதியுடன் சந்திப்பு
இந்தநிலையில் காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத், முகுல்வாஸ்னிக் ஆகியோர் கடந்த வாரம் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் தொகுதி எண்ணிக்கை உடன்பாடு ஆகவில்லை. கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மீண்டும் வந்து பேசுகிறோம் என்று தெரிவித்து விட்டு சென்றனர். ஆனால் இதுவரை வரவில்லை.
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடலாமா? என்று விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
40 தொகுதிகள் ஒதுக்கீடு
இந்தநிலையில் காங்கிரசுடன் ஏற்பட்டுள்ள தொகுதி பங்கீட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். இதற்காக காலை 10 மணியளவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் வந்தார். இதே போல கனிமொழியும் வந்தார். கருணாநிதியுடன் இருவரும் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.என். நேரு மற்றும் பூண்டி கலைவாணன் ஆகியோரும் கருணாநியுடன் ஆலோசனை செய்தனர். அவர்களுடனும் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கருணாநிதி நடத்திய இந்த ஆலோசனையில் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது. இன்னும் 2 தினங்களுக்குள் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply