- செய்திகள்

தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை சபாநாயகர் ப.தனபால் திட்டவட்டம்…

சென்னை, ஆக.19-
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று, சட்டசபையில் சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.
சஸ்பெண்ட் உத்தரவு
தி.மு.க.எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டத்துக்கு இடையில் பரப்பரப்பான சூழ்நிலையில் சட்டசபை கூட்டம் நேற்று  கூடியது. நேற்றைய கூட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்படாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பூங்கோதை, காந்தி, ராமச்சந்திரன், மோகன், எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் ஆகிய 7 பேரும் கலந்து கொண்டனர்.
வெளிநடப்பு
சட்டசபை கூடியதும் தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள், சஸ்பெண்ட் பிரச்சினை பற்றி பேச முற்பட்டனர். அவர்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். கேள்வி நேரம் முடிந்ததும் பேசலாம் என்றார். தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தியும் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க., காங்கிரஸ், மு.லீக் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
சிறிது நேரம் கழித்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபைக்கு திரும்பி மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். அதன் பிறகு கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சஸ்ெபண்ட் பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டனர். அவர்களுக்கு சபாநாயகர் அனுமதி அளித்தார்.
கோரிக்கை
ராமசாமி (காங்கிரஸ்):-நேற்று நடந்த பிரச்சினைகளை மறந்து தி.மு.க. உறுப்பினர்களை மீண்டும் சபைக்கு அழைக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி சபை நடக்க முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். எனவே தி.மு.க. உறுப்பினர்களுக்கு அளித்த தண்டனையை ரத்து செய்து மீண்டும் அவர்கள் சபைக்கு வர அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அபுபக்கர் (மு.லீக்):-நேற்று நடந்த பிரச்சினை மக்களிடம் பரவலாக பேசப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் சபையை மதித்து நடப்பதாக உறுதி அளித்தார். என்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை மதிக்கும் வகையில் தி.மு.க. மீது எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், சபாநாயகர் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஐ.பெரியசாமி (தி.மு.க.):-நேற்று தி.மு.க. உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தங்கள் கோரிக்கையை விடுத்தனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அறிவித்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இது ஒரு ஜனநாயக நாடு. தி.மு.க. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக போராடும் எதிர்க்கட்சி. எனவே நேற்று வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். அவர்களை சபைக்கு வர அனுமதிக்க வேண்டும்.
விதிகளை மதிப்பதில்லை
சபாநாயகர் ப.தனபால்:-இங்கு பேசிய உறுப்பினர்கள் அனைவரும் அவை நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த 15-வது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். சபை விதிகளை அவர்கள் மதிப்பதில்லை. சபாநாயகர் சொல்வதையும் கேட்பதில்லை.
தினந்தோறும் நான்படும் அவதி, கஷ்டங்கள், நெருக்கடி என்னவென்று உங்களுக்கு தெளிவாக தெரியும். தி.மு.க. உறுப்பினர்கள் 20 நிமிடங்கள் பேச வேண்டும் என்றால் 1 மணி நேரம், 1¼ மணி நேரம் ஆகிறது. ஒவ்வொரு வி‌ஷயத்துக்கும் பிரச்சினை எழுப்புகிறார்கள். ஆனால் 3 அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒரு மணி நேரத்தில் பேசி முடித்து விடுகிறார்கள்.
நான் அறிவுரை கூறினால் தி.மு.க. உறுப்பினர்கள் கிண்டல்-கேலி செய்கிறார்கள். ஒருமையில் பேசுகிறார்கள், சபாநாயகர் சொல்வதை மதிப்பதில்லை. அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேசும்போது தி.மு.க. உறுப்பினர்கள் விமர்சனம் செய்கிறார்கள். முதல்-அமைச்சரை அவமதிக்கும் வகையில் பேசுகிறார்கள். வெளியே நடந்த வி‌ஷயத்தில் அவையில் பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள். சபையில் விதியை சுட்டிக்காட்டிய பின்பும் அதை ஏற்பதில்லை.
மறுபரிசீலனை இல்லை
தினந்தோறும் சபையில் பிரச்சினை செய்யும் நோக்கத்துடனேயே வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் விதிகளை மதிப்பதாக கூறுகிறார். வருத்தம் தெரிவிப்பதாக சொல்கிறார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் சொல்வதைக் கூட அவர்கள் கேட்பதில்லை. நான் எவ்வளவோ பிரச்சினைகளை, வேதனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. ஒத்துழைப்பு கொடுக்க சொன்னால் கேட்பதில்லை. நேற்று எல்லை மீறி நடந்து கொண்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை.
இவ்வாறு சபாநாயகர் ப.தனபால் கூறினார்.
வெளிநடப்பு
உடனே தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். சபாநாயகர் மேஜை அருகே சென்றும் மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினார்கள். ஆனால் சபாநாயகர் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வும் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையை புறக்கணிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply