- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தி.மு.க.ஆட்சி அமைந்தவுடன் “அத்திக்கடவு- அவினாசி திட்டம்” நிறைவேற்றப்படும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, பிப்.14-
"கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் தி.மு.க.ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்" என்று, மு.க.ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக, தி.மு.க.பொருளாளா் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நீண்டநாள் கோரிக்கை
“அத்திக்கடவு- அவினாசி”  வெள்ளக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பில்லூர் அணையிலிருந்து மழை காலங்களில் நிரம்பி வழியும் 30 டி.எம்.சி.க்கும் மேற்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதால், இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையாக இப்பகுதி மக்கள் முன் வைத்து வருகிறார்கள்.
கடலில் வீணாகும் இந்த தண்ணீரை பில்லூர் அணை அருகில் உள்ள அத்திக்கடவு என்னுமிடத்தில் கால்வாய்கள் அமைக்கும் இத்திட்டத்தால் கோவை மண்டலத்தில் உள்ள 8 க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகள் பயனடையும், இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பும், 36 லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இத்திட்டத்தில் இருக்கிறது.
இது தவிர ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்புள்ள திட்டமாகவும் இந்த “அவினாசி- அத்திக்கடவு” திட்டம் கொங்கு மண்டல மக்களால் கருதப்படுகிறது.
அன்று…
புதிய திட்டங்கள், புதிய குடிநீர் திட்டங்கள் எல்லாமே பெரும்பாலும் கழக ஆட்சி காலத்தில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. கழக ஆட்சி இருந்த போது ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஆட்சியின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்ட அதிமுக ஆட்சியில் “அத்திக்கடவு- அவினாசி” திட்டம் நிறைவேறுதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சாத்தியமில்லை.
தி.மு.க.ஆட்சி அமைந்தவுடன்
2011 சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிட்ட கழக தேர்தல் அறிக்கையின் 19 ஆம் பக்கத்தில் “பவானி ஆற்றில் உள்ள உபரி நீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயப் பணிகளுக்குப் பயனுறும் வகையிலும் அத்திக்கடவு- அவினாசி வெள்ளக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று கழகம் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறது.
கழக ஆட்சி அமைந்தவுடன் அந்த வாக்குறுதிப்படி கோவை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த “அத்திக்கடவு- அவினாசி திட்டம்” நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Leave a Reply