- செய்திகள், விளையாட்டு

திறமைக்கு வயது தடையில்லை என்பதை நெஹ்ரா நிரூபித்துள்ளார் கவாஸ்கர் புகழாரம்

புதுடெல்லி, பிப்.26:-

திறமைக்கு வயது தடையில்லை என்பதை இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா நிரூபித்துள்ளார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

வங்கதேசத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற அந்த நாட்டுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் வித்திட்டார்.

2011-ம் ஆண்டு சர்வதேச போட்டிக்கான அணியின் இடம் பெற்ற 36 வயது நிரம்பிய ஆஷிஷ் நெஹ்ரா 5 ஆண்டுகள் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தார். இந்த நிலையில் ஆசிய கோப்பைக்கான அணியில் இடம் பெற்று 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதை கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்துள்ள கவாஸ்கர் வயது என்பது வெறும் எண்ணிக்கைதான் என்றும் திறமைக்கு வயது தடையில்லை என்பதையும் நெஹ்ரா நிரூபித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.நெஹ்ரா பேட்ஸ்மேன் ஏமாந்து போகும் விதமாக திறமையாக பந்து வீசினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவையும் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ரோஹித் அந்தப் போட்டியில் 55 பந்துகளில் இந்திய அணியில் அதிகபட்சமாக 88 ரன்களைக் குவித்தார்.

அணியின் மற்ற வீரர்கள் போராடிய நிலையில் ரோஹித் மிக எளிதாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் வித்திட்டார் என்றும் பாராட்டியுள்ளார்.

ரோஹித் 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் வங்கதேச வீரர் சாகிப் கேட்சை தவறவிட்டார். அதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது என்றும்  வங்கதேச வீரர்கள் பீல்டிங்கில் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். ரோஹித்-பாண்ட்யா ஜோடி அருமையாக விளையாடினர் என்றும் 20 ஓவர் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் இலக்காக கொண்டு விளையாடுவது சற்று கடினமான ஒன்றுதான் என்றும் கவாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply