- ஆன்மிகம், செய்திகள், மாவட்டச்செய்திகள், விருதுநகர்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேக விழா

விருதுநகர், ஜன.18-
வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேக விழா வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

யாகசாலை பூஜை தொடக்கம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

இந்த கோவிலில் தங்க விமான கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதை முன்னிட்டு சங்கல்ப பூஜைகள் நிறைவு பெற்று, யாகசால பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று யாகசாலை பூஜைகள் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் அமர்ந்து பூஜை செய்தனர். நாளை வரை யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

20-ந் தேதி கும்பாபிஷேகம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் கோவில் தங்கவிமான கும்பாபிஷேகமும், கோபுர கும்பாபிஷேகமும் 20-ந் தேதி (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது.

விழாவையொட்டி வில்லிபுத்தூர் நகர் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில்  பக்தர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறினர்.

விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் விழாக்குழுவினரும்  செய்து வருகிறார்கள்.

Leave a Reply