- செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க நிபந்தனை ஆட்சியர் தகவல்…

திருவள்ளூர், ஆக.25-
திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவிப்பு விடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
மாசுபடுவதை தடுக்க
சிலைகளை கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கவும் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,
ரசாயண கலவையற்ற
விநாயகர் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இவை மட்டுமே நீர்நிலையில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
இயற்கை வர்ணங்கள்
நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply