- செய்திகள்

திருவண்ணாமலை அருகே மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.7 லட்சம் திருட்டு மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு…

திருவண்ணாமலை, ஜூலை 26-
திருவண்ணாமலை அருகே பாவுப்பட்டு கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ. 7 லட்சம் மற்றும் அம்மன் தாலி திருடியவர்களை கைது செய்யக்கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அ.ஞானசேகரனிடம் கிராம பொதுமக்கள் நேற்று மனு கொடுத்தனர்.
ஆட்சியரிடம் மனு
இதுகுறித்து திருவண்ணாமலையில் ஆட்சியர் அ.ஞானசேகரனிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
திருவண்ணாமலை வட்டம் பாவுப்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. அங்குள்ள உண்டியலை கடந்த மே மாதம் 19-ம் தேதி இரவு மர்ம நபர்கள் உடைத்து, அதிலிருந்த ரூ.7 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர்.
நடவடிக்கை எடுக்க வில்லை
இது குறித்து தச்சம்பட்டு காவல் நிலையத்தில் மே மாதம் 27-ம் தேதி புகார் கொடுத்தோம். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் வெறையூர் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தோம். அவரும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டோம். அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால், தங்களிடம் வந்துள்ளோம். தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறி உள்ளனர்.
வழக்கு பதிவு…
இது குறித்து தச்சம்பட்டு போலீசார் கூறும்போது, பாவுப்பட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருடு போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில் தொகை எவ்வளவு என்று தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி இருக்கும்போது உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சம் என்பது விநோதமாக உள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஏற்க முடியாது.
ஆதாரத்துடன் தான்…
இது தொடர்பாக சந்தேக நபர்களை அழைத்து வந்து விரல் ரேகை பதிவு செய்து விசாரணை நடத்தினோம். யாருடைய ரேகையும் ஒத்துபோகவில்லை. திருட்டு வழக்கில் தகுந்த ஆதாரத்துடன்தான் ஒருவரை கைது செய்ய முடியும். எங்கள் விசாரணை நடைபெறுகிறது" என்றனர்.

புட்நோட்
திருவண்ணாமலை அருகே உள்ள பாவுபட்டு  கிராமத்தில் 2 மாதங்களுக்கு முன்பு மாரியம்மன் கோவிலில் இருந்த உண்டியலை  உடைத்து மர்ம நபர்கள் ரூ.7 லட்சம் உண்டியல் பணத்தையும் கொள்ளையடித்து  சென்றனர். இது தொடர்பாக நட வடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஞானசேகரனிடம் கிராம மக்கள் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்

Leave a Reply