- செய்திகள்

திருவண்ணாமலையில் 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்…

திருவண்ணாமலை, ஆக. 19-
திருவண்ணாமலையில் நேற்று 2 வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆவணி மாத பவுர்ணமி
திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியையட்டி 2-வது நாளாக நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் மாலை 4.48 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 3.53 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி புதனன்று மாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.
விடிய விடிய..
அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு முழுவதும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று காலையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று காலை 10 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனாலும் அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றனர்.
அண்ணாமலையார் கோவிலில்
அதேபோல் அதிகாலையிலிருந்தே அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கம்போல அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை நேற்று முன்தினமும் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தது.
அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடந்து வருவதால் ராஜகோபுரம் நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளன. எனவே ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டி வாசல் வழியாக தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
3 மணி நேரம்
நேற்று காலை நிலவரப்படி பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததால் அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை தரிசனம் செய்ய 3 மணிநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

—-

Leave a Reply