- செய்திகள்

‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’…… சென்னை மக்களை வாட்டி வதைக்கும் வெயில் 100 டிகிரிக்கு கொளுத்துவதால் கடும் அவதி.

சென்னை,ஆக.19-

சென்னையில் மீண்டும் வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

வெயில்

சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த கோடைக்காலம் கடுமையாக வாட்டியெடுத்தது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் 100 டிகிரிக்கு சுட்டெரித்தது. இந்தநிலையில் கடந்த ஜூன் 1-ந் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த தாக்கத்தினால் தமிழகத்திலும் அவ்வபோது மழை பெய்தது வந்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னை, வேலூர், கடலூர், மதுரை, கரூர் உள்ளிட்ட நகரங்களில் வெயில் 100 டிகிரிக்கு கொளுத்தியெடுக்கிறது. இதன் காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், மாணவர்கள், பணிகளுக்கு செல்பவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடனே வாகனங்களை இயக்குகின்றனர். அதே நேரத்தில் இளநீர், எலுமிச்சை போன்ற குளிர்பானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஒருவர் கூறியதாவது:-

இயல்பை விட…
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கேரளாவில் கூட பருவமழை குறைவாகவே பெய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பலத்த காற்று வீசினாலும், அதில் ஈரப்பதம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதனால் தான் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலை மேலும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது.

அதாவது தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையே அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் பகல் நேரத்தில் வலுவான தரைக்காற்று வீசும். இயல்பு நிலையை விட 3 டிகிரி வரை வெயில் அதிகமாக காணப்படும். அதே போல் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply