- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

திருமங்கலம் அருகே தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி…

மதுரை,டிச.10-
திருமங்கலம் அருகே தொடர் மழைக்கு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலியானார்.
வீடுகளுக்குள் வெள்ள புகுந்தது
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருமங்கலத்தை சுற்றி உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. நடுவக்கோட்டை கண்மாய் நிரம்பியது.
இதில் இருந்து வெளியேறிய தண்ணீர் கிழவனேரி கிராமத்திற்குள் புகுந்தது. அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், மக்கள் அனைவரும் கிராமத்தைவிட்டு வெளியேறினர். சம்பவ இடத்துக்கு திருமங்கலம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்றனர். கிராம மக்களை, அப்பகுதியில் உள்ள சமூதாயக் கூடத்தில் தங்க வைத்தனர்.
சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
வாடிப்பட்டி அருகே உள்ளது முத்துராமலிங்கபுரம். இங்குள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகே குடியிருந்து வருபவர் சசிகுமார். தொடர் மழையால் இப்பகுதியில் சுவர்கள் நனைந்து சேதமடைந்திருந்தன. இந்த சுவர் அருகே வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து சசிகுமார் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சசிகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை  பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

Leave a Reply