- செய்திகள், மாநிலச்செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடியில் தங்க ஆபரணம்

சித்தூர், ஏப்.6-
தனி தெலுங்கானா மாநிலம் உருவானால் ஏழுமலையானுக்கு தங்க ஆபரணம் காணிக்கை வழங்குவதாக போராட்ட காலத்தில் சந்திரசேகர ராவ் வேண்டிக் கொண்டதை தொடர்ந்து ரூ.5 கோடி மதிப்பில் தங்க ஆபரணம் தெலுங்கானா அரசு சார்பில் சந்திரசேகரராவ் வழங்குகிறார்.
தனி தெலுங்கானா
தனி தெலுங்கானா மாநிலம் உருவானால் ஏழுமலையானுக்கு தங்க ஆபரணம் காணிக்கை வழங்குவதாக போராட்ட காலத்தில் சந்திரசேகர ராவ் வேண்டிக் கொண்டார். இப்போது தனி தெலுங்கானா மாநிலம் உருவானதுடன் அம்மாநில முதல்–மந்திரியாகவும் ஆனார்.
இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.அதன்படி 14.20 கிலோ எடையில் தாமரை உருவம் பொறித்த சாலிகிராம ஆரம் ரூ. 3 கோடியே 70 லட்சத்து 76,200 மதிப்பிலும், 5 சரம் கொண்ட கழுத்து ஆபரணம் 4.65 கிலோ எடையில் ரூ. 1 கோடியே 21 லட்சத்து 41 ஆயிரம் செலவிலும் செய்ய தேவஸ்தானத்துக்கு தெலுங்கானா அரசு சார்பில் முதல்–மந்திரி சந்திரசேகராவ் ரூ. 5 கோடி கொடுத்தார்.
மன்னர் ஆட்சிக்கு பின்
கோவையைச் சேர்ந்த பிரபல நகை கடை நிறுவனம் இந்த 2 ஆபரணங்களையும் தயாரித்து தேவஸ்தானத்தில் ஒப்படைத்து விட்டது. இது தேவஸ்தான கஜானாவில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தை விட நகையின் எடை சற்று கூடுதலானது. அதன்படி 2 ஆபரணங்களின் மொத்த எடை 19.72 கிலோவாக இருந்தது. இந்த 2 ஆபரணங்களும் மூலவருக்கு சாத்தப்படுகிறது. முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் விரைவில் திருப்பதி வந்து இந்த ஆபரணங்களை ஏழுமலையானுக்கு அணிவிப்பார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு மன்னர்கள் பலர் ஏராளமான தங்க, வைர, வைடூர்ய நகைகளை காணிக்கையாக வழங்கி உள்ளனர். ஆனால் தற்போது மன்னர் ஆட்சி அகற்றப்பட்ட நிலையில் ஒரு மாநில அரசாங்கம் சார்பில் ஏழுமலையானுக்கு தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்குவது இதுதான் முதல் முறையாகும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply