- ஆன்மிகம், செய்திகள், திருவள்ளூர், மாவட்டச்செய்திகள்

திருத்தணி கோவிலில் காணும் பொங்கல் விழா வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் திருவீதி உலா

திருத்தணி, ஜன. 18-
காணும் பொங்கல் விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி-தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவீதி உலா
காணும் பொங்கல் திருவிழாவையொட்டி திருத்தணி மலைக்கோயிலில் இருந்து, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் சன்னதி தெருவில் உள்ள கோவில் ஆணையாளர் குடியிருப்பு முன் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் நேற்று காலை 6 மணிக்கு மலைப்படிகள் வழியாக வந்து எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு திருத்தணி பகுதி சுமைதாரர்கள் மாட்டு வண்டியில் உற்சவ பெருமானை நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்துச் சென்றனர். மாலை 5.30 மணிக்கு பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அரி எம்.பி.
விழாவில், திருத்தணி கோ.அரி எம்.பி., நகர்மன்றத் தலைவர் சவுந்தர்ராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இரவு 8.30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றார். விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையாளர் புகழேந்தி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply