- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

திருச்சி மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரிசுச் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி 5 பேரை பொதுமக்களே போலீசில் ஒப்படைத்தனர்…

மணப்பாறை, ஏப்.04-
திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரிசுச் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குலுக்கல் முறை
திருச்சி – மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளக்கல் என்ற இடத்தில் வி.ஏ.எஸ்.டி என்ற பெயரில் குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கும் ஏலச்சீட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் வாரம் தோறும் ரூ.100 செலுத்தினால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு கார், பைக், பிரிஜ், கிரைண்டர், மிக்சி, கியாஸ் ஸ்டவ், மொபைல் போன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
இதில் மணப்பாறை மட்டுமல்லாது திருச்சி, துவரங்குறிச்சி, வையம்பட்டி, விராலிமலை, தோகைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் சீட்டுக் கட்டியுள்ளனர். 13 மாதங்கள் மட்டும் சீட்டுக் கட்டினால் போதும் இதில் 2, 5 மற்றும் பத்தாவது வாரங்களில் மட்டும் ரூ.200 செலுத்த வேண்டும். வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு குலுக்கல் நடைபெற்றுவந்தது. குலுக்கல் உள்ளுர் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பும் செய்யப்பட்டதால் ஏராளமானவர்கள் சீட்டில் சேர்ந்தனர். பரிசு கிடைக்கப் பெற்றவர்கள் அதற்குமேல் சீட்டுத் தொகை செலுத்த வேண்டியதில்லை எனவும் கூறியுள்ளனர். ஆனால், ஒவ்வொரு வாரமும் சீட்டு நடத்தியவர்கள் முறைகேடாகச் செயல்பட்டு அவர்களால் நியமிக்கப்பட்டவர்களுக்கு சீட்டு விழுந்ததாக கூறி ஒவ்வொரு வாரமும் ஏமாற்றி வந்துள்ளனர்.
போலீசில் ஒப்படைப்பு
நேற்றுடன் (இந்த வாரத்துடன்) சீட்டு முடியும் நிலையிலும் பணம்கட்டிய பெரும்பாலானவர்களுக்கு இதுவரை பரிசு விழவே இல்லை. கடைசி வாரமான நேற்று குலுக்கல் நடைபெற்றது. பரிசு விழாதவர்கள் சீட்டு நடத்தியவர்களிடம் தாங்கள் கட்டிய சீட்டுப் பணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது பணம் கட்டியவர்களுக்கு முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் சீட்டு நடத்திய நாகர்கோவிலைச் சேர்ந்த ஆண்டனி மகன் ஜனா (29), மணப்பாறை அத்திக்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன்கள் திருப்பதி (25), சங்கர் (23), விஜயன் (22), நொச்சிமேடு பகுதியைச் சேர்ந்த சந்தியாகு மகன் ஜோசப் (46) ஆகிய ஐந்து பேரையும் பிடித்து மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர்.
முழு மதிப்பு
பாதிக்கப்பட்டவர்கள் மணப்பாறை இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். ஒரு நபருக்கு ரூ.1600 வீதம் பத்தாயிரம் பேரிடம் ரூ1.60 கோடி வசூல் செய்துள்ளனர். இதில் பரிசு கொடுத்தது போக பல லட்ச ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் புகார் கொடுத்தால்தான் மோசடி செய்யப்பட்ட முழு மதிப்பும் தெரியவரும். சீட்டு நடத்திய ஐந்து பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரிசுச் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்களைப் பிடித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் ஒப்படைத்த சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply