- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தனியார் கல்லூரியில் பயங்கர தீ விபத்து

திருச்சி,மார்ச்.1-
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தனியார் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தை, 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
கல்லூரியில் பயங்கர தீ விபத்து
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் பழைய அறிவியல் ஆய்வகம் (லேப்) ஒன்று உள்ளது. அந்த ஆய்வகம் தற்போது பூட்டப்பட்டு அதில் உடைந்த மேஜைகள், நாற்காலிகள் மற்றும் பழைய சாமான்கள் போட்டு வைக்கப்பட்டு இருந்தன.
இந்த ஆய்வகத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. அந்த வழியாக சென்ற கல்லூரி ஊழியர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
2 மணி நேரம் போராடி அணைத்தனர்
இது பற்றிய தகவல் அறிந்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அந்த கல்லூரிக்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மள,மளவென பரவி அங்கிருந்த மரச்சாமான்கள் வேகமாக எரிய தொடங்கியது.
இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர். மேலும், மாநகராட்சி லாரி மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி நடந்தது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply