- செய்திகள்

திருச்சி அருகே குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததால் பரபரப்பு மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி, ஆக.25-

துறையூர் அருகே குடிநீர் தொட்டியில் வி‌ஷம் கலந்து பொதுமக்களை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷம் கலந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

துர்நாற்றம் வீசிய குடிநீர்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது ஏ.பாதர்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதி கீழப்பட்டி கிராமம். இங்கு 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி உள்ளது. அதில் பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்பவர்கள் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் போது, தண்ணீரில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விஷம் கலந்தது யார்?

இது குறித்து அப்பகுதி பெண்கள் இளைஞர்களிடம் கூறவே, அவர்கள் குடிநீர் தொட்டியின் மேல் ஏறி, மூடியை திறந்து பார்த்தனர். அப்போது தண்ணீரில் குருணை மருந்து (விஷம்) கலந்திருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றினர்.
குடிநீர் தொட்டியில் குருணை மருந்தை கலந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கலந்தனர்? என்று தெரியவில்லை. பொது மக்களை கொலை செய்யும் முயற்சியில் இந்த செயலில் ஈடுபட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பெரும் ஆபத்து தவிர்ப்பு

இது பற்றி அப்பகுதியினர் கூறும் போது, குடி தண்ணீரில் குருணை மருந்து கலந்திருப்பது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையென்றால் அதிக உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இனிமேல் இது போன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று கூறினர்.

Leave a Reply