- உலகச்செய்திகள், செய்திகள்

திபெத் அரசின் பிரதமராக சங்கே மீண்டும் தேர்வு வெளிநாட்டில் இயங்கும்

தர்மசாலா, ஏப். 28:- வெளிநாட்டில் இயங்கும் திபெத் அரசின் பிரதமராக லப்சங் சங்கே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5 பேர் போட்டி

திபெத் நாடு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை விடுவிக்கக் கோரி, புத்தமத துறவி தலாய்லாமாவின் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவரது தலைமையில், வெளிநாட்டில் இயங்கும் திபெத் அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலாய் லாமா, கடந்த 2011-ம் அண்டு அரசியலில் இருந்து விலகினார். இதையடுத்து, பிரதமர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில், லப்சங் சங்கே (48) தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த அக்டோபரில் தொடங்கின. முதல் கட்டமாக, 5 பேர் பிரதமர் போட்டியில் இருந்தனர்.

வாக்கு வித்தியாசம்

முதல்கட்ட வாக்குப்பதிவில், அவர்களில் இருந்த 2 பேர் மட்டுமே பிரதமர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். தேர்வின் இறுதிக்கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 90,377 வாக்குகளில் 59,353 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில், சங்கே தன்னை எதிர்த்து போட்டியிட்ட பெம்பா செரிங்கை விடவும், 9,012 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தேர்தலில், சங்கேவுக்கு 33,876 வாக்குகளும், செரிங்கிற்கு 24,864 வாக்குகளும் கிடைத்தன. டார்ஜிலிங் நகரில் பிறந்த சங்கே, டெல்லியில் கல்வி பயன்றனவர். உயர்கல்வியை அவர் அமெரிக்காவில் முடித்துள்ளார்.
இதற்கிடையே, திபெத்திய கல்லூரியின் முதலாம் ஆண்டு முதுகலை பட்டமளிப்பு விழா தர்மசாலாவில் நேற்று நடந்தது. இதில், புத்த மத துறவி தலாய்லாமா கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, மாணவர்கள் நவீன கால கல்வியை மட்டும் கற்றால் போதாது. தனக்கும், சமூகத்துக்குமான ஒழுக்க நெறிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை திபெத்திய கலாசாரம் தாராளமாக வழங்குகிறது. அதனை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளை தேட வேண்டும் என்றார்.

Leave a Reply