- செய்திகள்

திட்டக்குடியில் பயங்கரம் கழுத்தை அறுத்து எல்.கே.ஜி. சிறுவன் கொலை பெற்றோரிடம் போலீஸ் விசாரணை…

பெண்ணாடம் ஆக.24-

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கழிவறைக்கு அழைத்து  சென்று சிறுவனை கழுத்தை அறுத்து கொன்ற கொலையாளி யார்? என்று பெற்றோரிடம்  போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பள்ளி

ராமநத்தம் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள்கள் பரமேஷ்வரி (வயது 7), ராஜேஷ்வரி (6), மகன் நித்தீஸ் (4). பரமேஷ்வரியும், ராஜேஷ்வரியும் சித்தேரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.

தனியார் பள்ளி

நித்தீஷ் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். தினமும் அவன் வேனில் பள்ளிக்கு சென்று வந்தான். நேற்று முன்தினம் காலை நித்தீசை சங்கீதா வேனில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவரது மகள்கள் ராஜேஷ்வரி, பரமேஷ்வரி ஆகியோரையும் பள்ளிக்கு அனுப்பினார்.
இதையடுத்து சங்கீதாவும், முருகேசனும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

விளையாட்டு

மாலை 5 மணிக்கு நித்தீஷ் பள்ளி முடிந்து வேனில் திரும்பி வந்தான். வீட்டின் முன்பு சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். 6.30 மணி அளவில் சங்கீதா வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். நித்தீசை எங்கே என்று தனது மகள்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் அவன் நண்பர்களுடன் வெளியே விளையாடி கொண்டிருக்கிறான் என்று கூறினர்.

காணவில்லை

உடனே சங்கீதா அவன் விளையாடி விட்டு வரட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால் இரவு 8 மணிவரை சிறுவன் நித்தீஷ் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த சங்கீதா நித்தீசை பல்வேறு பகுதிகளில் தேடினார். அப்போது முருகேசனும் வீட்டுக்கு வந்தார். மகனை காணவில்லை என்று அவரிடம் சங்கீதா கூறினார். இருவரும் வீட்டின் தோட்டத்துக்கு சென்று தேடினர்.

சந்தேகம்

தோட்டத்தில் உள்ள கழிவறை அருகே ரத்தம் சிதறி கிடந்தது. கழிவறை கதவை திறந்து பார்த்த போது நித்தீஷ் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தான். அவனது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. உடனே நித்தீசின் பிணத்தை கைப்பற்றி வீட்டுக்கு கொண்டுவந்தனர். மகனின் உடலை பார்த்து சங்கீதா கதறி அழுதார். அவன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசாருக்கு பெற்றோர் தெரிவிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகராறு

போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுவனின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
சிறுவன் நித்தீசை யாரோ தோட்டத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவன் எதற்காக கொலை செய்யப்பட்டான்? அவனை கொன்ற கொலையாளி யார்? என்று தெரியவில்லை. சொத்து தகராறு காரணமா? அல்லது முன்விரோதம் காரணமா என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

விசாரணை

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இதையொட்டி முருகேசன் மற்றும் சங்கீதாவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றனர். சிறுவன் கொலை செய்யப்பட்டதை போலீசுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் கணவன்-மனைவியிடம் தனித்தனியாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply