- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

தாயின் இறுதி ஊர்வலத்தில் சோகம் ஆம்புலன்சு வேன் மோதி மகன் பலி பெரம்பலூர் அருகே பரிதாபம்

பெரம்பலூர்,மார்ச்.1-

பெரம்பலூர் அருகே தாயின் இறுதி ஊர்வலத்தில் ஆம்புலன்சு வேன் மோதி மகன் பரிதாபமாக இறந்தார். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

பெண்ணின் இறுதி சடங்கு ஊர்வலம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 70). உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் இறந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு பொன்னம்மாள் உடலை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்சு அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பள்ளத்தில் இறங்கியது

வேன் மயானம் அருகே செல்லும் போது, அமரர் ஊர்தி திடீரென ஒரு பள்ளத்தில் இறங்கியது. இதைத் தொடர்ந்து ேவனை ரோட்டுக்கு ஏற்றுவதற்கான முயற்சியில் டிரைவர் சுதாகர் ஈடுபட்டார். வேகமாக இயக்கவே, பள்ளத்தின் மேல்நோக்கி ஏறியது.

அசுர வேகத்தில் ஏறவே, பள்ளத்தின் மேற்புறம் நின்று கொண்டிருந்த பொன்னம்மாளின் மகனான விவசாயி முருகன் (48) மற்றும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற குமார் உள்பட 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். முருகன் அமரர் ஊர்தியின் சக்கரத்தில் சிக்கியதால் பலத்த காயமடைந்தனர்.

மகன் பலி

இதையடுத்து அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் இறுதி ஊர்வலத்தின் போது அமரர் ஊர்தி மோதி மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply