- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தாணுலிங்க நாடார் நூற்றாண்டுவிழா: அரசு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்…

சென்னை, பிப்.7-
தாணுலிங்க நாடார் நூற்றாண்டு விழா வாகன பிரச்சார பயணம் நடத்த காவல்துறையும் தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தாணுலிங்க நாடார்

1915-ம் வருடம் பிப்ரவரி மாதம் 17-ந் தேதி கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் பொற்றையடியில் பிறந்த சுதந்திரப் போராட்ட மற்றும் எல்கை போராட்ட தியாகி ஐயா தாணுலிங்க நாடார் படித்து பட்டம் பெற்று காவல்துறை, ராணுவம் மற்றும் வழக்கறிஞராக பணியாற்றி 1947-ம் வருடம் திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவராகி பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

1948 முதல் 1951 வரை 3 வருடம் அன்றைய திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தான சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினராகவும், 1953-ல் நாகர்வோவில் நகர மன்ற உறுப்பினராகவும், 2-வது முறையாக திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தான சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளாார்.
நூற்றாண்டு விழா
தாணுலிங்க நாடார் நூற்றாண்டு விழா அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நூற்றாண்டு விழாக்குழு மூலம் கடந்த 2015 பிப்ரவரி மாதம் 17-ந் தேதி துவங்கி இந்த வருடம் ஜனவரி 19-ம் தேதி நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் கருத்தரங்கம், ஜனவரி 26 முதல் 20 நாட்கள் ரதயாத்திரை, இம்மாதம் 17-ல் அவருடைய சமாதியில் புஷ்பாஞ்சலி, 28-ந் தேதி பொற்றையடியில் மணி மண்டபம் திறப்பு விழாவுடன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை நிறைவு செய்ய திட்டமிட்டு பணிகள் நடந்துவரவே, கடந்த ஜனவாி 26-ந் தேதி காவல்துறையிடம் முறையாக தகவல் தெரிவித்து முஞ்சிறை ஒன்றியம் கொல்லங்கோட்டிலிருந்து துவங்கிய ரதயாத்திரையை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி யாத்திரையில் செல்ல வந்தவர்களை கைது செய்தது. ஒரு மாமனிதனின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்நிகழ்வு வருத்தமளிக்கிறது.
வேண்டுகோள்
எனவே எவ்வித பிரச்சினையுமின்றி அமைதியாக வருகிற 21-ந் தேதி நூற்றாண்டு விழாக்குழு சார்பில் மாவட்டம் முழுவதும் ஐயா தாணுலிங்க நாடார் நூற்றாண்டு விழா வாகன பிரச்சார பயணம் நடத்த காவல்துறையும் தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கையில் கூறி உள்ளார்.

Leave a Reply