- சினிமா, செய்திகள், விமர்சனம்

தற்காப்பு விமர்சனம்

காவல்துறையின் ஒவ்வொரு என்கவுண்டருக்கும் பின்னால் இருக்கிற அரசியலை ஆணியடித்து தொங்க விட்டிருக்கும் படம்.
சக்திவேல் வாசு நேர்மையான போலீஸ் அதிகாரி. அதோடு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். மேலதிகாரி சொன்னதற்காக ரியாஸ்கானை என்கவுண்டர் செய்யப் போக, தொடங்குகிறது சிக்கல். மனித உரிமைக்கமிஷன் அதிகாரியின் விசாரணையின்போது தான் ரியாஸ்கான் என்கவுண்டருக்குப் பின்னால் இருந்த அரசியல் சதியை சக்தி புரிந்து கொள்கிறார். இதற்குப்பிறகு ஹீரோ சும்மா இருப்பாரா? அதிரடி ஆக்‌ஷனுக்கு தயாராகும் நேரத்தில் அவருக்கு குற்றவாளி முத்திரை குத்தி என்கவுண்டர் செய்யத் துரத்துகிறது போலீஸ்.
இந்தக் கதைக்குள் வீட்டை விட்டு ஒடிவந்த இரண்டு காதல் ஜோடிகளின் கதையையும் இணைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். சக்தியை போலீஸ் என்கவுண்டர் செய்ய தேர்ந்தெடுத்த இடத்துக்கே தற்செயலாக இந்த காதல் ஜோடிகளும் வந்து சேர, முடிவு என்னாகிறது என்பது விறுவிறு கிறுகிறு கிளைமாக்ஸ்.
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சக்திவேல்வாசு கம்பீரம். தனக்குப் பின்னால் நடக்கும் சதியை இவர் புரிந்து கொள்ளத் தொடங்கியதில் இருந்து நடிப்பில் பொறி பறக்கிறது. மனித உரிமைக் கமிஷன் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி வந்த பிறகு படம் இன்னும் வேகம் பிடிக்கிறது. போலீஸ் அதிகாரி சக்திவேல் வாசுவை விசாரிக்கும் இடத்தில் நேர்மையும் கம்பீரமும் சமுத்திரக்கனி கேரக்டருக்கு தனி அழகு சேர்க்கிறது.
எப்.எஸ்.பைசலின் இசையும், ஜேன்ஸ் ஆனந்த்தின் ஒளிப்பதிவும் கதையின் வேகத்துக்கு ஈடு கொடுக்கின்றன. ஆர்.பி.ரவியின் இயக்கத்தில் அந்த கிளைமாக்ஸ் மட்டும் சறுக்கல்.

Leave a Reply