- செய்திகள்

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து முறையாக கடிதம் வந்ததும் விளக்கம் அளிப்பேன் நடிகர் விஷால் கூறுகிறார்…

சென்னை,ஆக.18-

ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வைத்த கெடுவுக்கு நடிகர் விஷால் பதில் கூறியிருக்கிறார். முறையாக கடிதம் வந்ததும் இதுபற்றி உரிய விளக்கம் அளிப்பேன் என்று அவர் கூறினார்.

ஒரு வாரம் கெடு

சென்னையில் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டத்தில் நடிகர் சங்க செயலாளர் விஷால் ஒரு வார பத்திரிகையில் சங்கத்தை விமர்சித்தது பற்றி விவாதிக்கப்பட்டது. விஷால் அந்த பேட்டியில் `தயாரிப்பாளர் சங்கம் ஆக்கபூர்வமாக செயல்படவில்லை. நடிகர் சங்க தேர்தலை கையில் எடுத்தது போல தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிடும் சூழ்நிலை ஏற்படும்' என்று தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்ட பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து விஷால் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் நிறைவேறியது. அந்த தீர்மானத்தில், `தனது பேட்டிக்கு ஒரு வார காலத்துக்குள் விஷால் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி வருத்தம் தெரிவிக்கத் தவறினால் அவர் நடிப்பில் தீபாவளி ெவளியீடாக வரும்  `கத்திச்சண்டை' திரைப்படம் தவிர்த்து அவர் நடிக்கும் எந்த தமிழ் திரைப்படங்களுக்கும் தயாரிப்பாளர் சங்கமும் தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதம் வந்ததும் விளக்கம்

இதுகுறித்து மதுரையில் `கத்திச்சண்டை' படப்பிடிப்பில் இருந்த விஷாலிடம் கேட்டபோது, `தயாரிப்பாளர் சங்க தீர்மானம் குறித்து இதுவரை எனக்கு எந்த கடிதமும் வரவில்லை. முறைப்படி அவர்கள் அனுப்பும் கடிதம் கிடைத்ததும் உரிய விளக்கம் அளிப்பேன்' என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்க செயலாளருக்கும் இடையே உருவாகி இருக்கும் இந்த கருத்து வேறுபாடு தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply