- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு…

திருச்சி, மார்ச் 30-
தமிழ்நாட்டில் ஊழல் கட்சிகளை அப்புறப்படுத்த தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
பொதுக்கூட்டம்
திருச்சி உறையூரில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர செயலாளர் விஜயராஜன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, ஊழல் கட்சிகளை எதிர்த்து சரித்திரம் படைக்கும் கூட்டணிதான் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி. இந்த கூட்டணி தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. கேப்டன் எப்போதும் நல்ல முடிவைத்தான் எடுப்பார். எங்களோடு கூட்டணிக்கு தி.மு.க. பேசியது, பா.ஜ.க. பேசியது, மக்கள் நலக் கூட்டணி பேசியது. கேப்டன் எப்போதுமே தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எது நல்லதோ அதைத்தான் தேர்வு செய்வார். தெளிவான முடிவை எடுத்து மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து நிரூபித்துள்ளார். கேப்டன் ஒரு ஞானப்பழம். மக்களைப் பற்றி சிந்திக்கும் ஞானம் உள்ளவர். மக்கள் மனதில் தேனில் கலந்த பழமாக, ஞானப்பழமாக உள்ளார்.
எதிர் நீச்சல்
விஜயகாந்த் எப்போதும் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர். அவரை எதிர்த்தவர் யாரும் சினிமா துறையிலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. தமிழக மக்கள் துரோகிகளை என்றுமே அனுமதிக்க மாட்டார்கள். அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக, எங்களிடமிருந்து ஓடிச் சென்ற 9 துரோகி எம்.எல்.ஏ.களின் தலையெழுத்து எப்படி மாறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தமிழக மக்கள் துரோகிகளுக்கு என்றுமே இடம் கொடுத்தது இல்லை.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தேர்தலுக்கு முன்னரே தண்டனை பெறுவது உறுதி. தி.மு.க.வுக்கு 2ஜி பிரச்சினை தலைக்குமேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. ஊழல்களை ஒழிப்போம் என்று முடிவெடுத்துள்ள தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி அனைத்து இடங்களிலும் மகத்தான் வெற்றி பெற்று சாதனைப் படைக்கும் என்றார்.

Leave a Reply