BREAKING NEWS

தமிழ்நாட்டில் இருக்க வேண்டுமா? தமிழ் பேசு…

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசியல் அதிகாரத்தை வெல்வதற்காகவும், அதைத் தக்க வைப்பதற்காகவும் எதையும் செய்யக்கூடியவர். பேச்சும் அதிரடியாகத்தான் இருக்கும். ஆனாலும் அண்மையில் அவர் கூறிய ஒரு கருத்து என்னை அதிகம் யோசிக்க வைத்தது. “வங்காளத்தில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் வங்க
மொழி பேச வேண்டும்” என்றதுதான் அது.

ஏனிப்படி கூற வேண்டும் ஒரு முதல்வர்? வங்காளத்தில் இருப்பவர்கள் எப்படியும் வங்கம்  கற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும், அது இல்லாமல் எப்படி வண்டி ஓட்ட முடியும்? ஓட்ட முடிகிறது. அந்தஅளவுக்கு இந்தி அங்கே வங்க மொழியின் இடத்தை கைப்பற்றி வருகிறது. இல்லாவிடில் இப்படி வலியுறுத்த வேண்டிய
அவசியம் என்ன?

பள்ளி மூலமோ அல்லது இந்திக்காரர்கள் மூலமோ ஒரு மாநிலத்தில் இந்தி நுழைந்தால் அது கூடாரத்திற்குள் ஒட்டகத்தை அனுமதித்த கதைதான். பீகாரி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகளுக்கு இந்தியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்கொல்லி மாதிரி அது மொழிக்கொல்லி. காரணம் அதன்
கையில் உள்ள ஒரு பயங்கரமான ஆயுதம். அதுதான் மத்திய அரசின் “ஆட்சி மொழி” எனும் தனி அந்தஸ்து, சிறப்பு வசதி.

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெற்றபோது அன்றைக்கு இருந்த சுதந்திர உணர்வில் “அந்நிய மொழியாம் ஆங்கிலமா நமது ஆட்சி மொழி?” எனும் கேள்வி தீவிரமாய் எழுந்து இந்தியை கொண்டுவந்து விட்டார்கள். இதனால் பாதிக்
கப்பட்டது பிற இந்திய மொழிகள். ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்த போது, அனைத்து இந்திய மொழிகளுக்கிடையே ஒருவித சமத்துவம் இருந்தது, எந்தவொரு மொழிக்கும் தனி அதிகாரம் இல்லை.

இந்தி உள்ளிட்ட ஒவ்வொரு இந்திய மொழியும் அந்தந்த மாநிலம் அல்லது மாநிலங்களில் ஆட்சி மொழியாக இருக்க, மத்தியில் ஆங்கிலம் இருந்தது. ஓர் அந்நிய மொழியை கற்க வேண்டிய அவசியம் அனைத்து இந்தியருக்கும் ஏற்பட்டது என்றாலும் அந்தச் சுமை பொதுவானதாக இருந்தது. அதனால் மொழி விஷயத்தில் ஓரவஞ்சனை இல்லை. அதுமட்டுமல்ல, ஆங்கிலம் அந்நிய மொழி என்றாலும் அது இங்கே வந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகிப் போனதால் அனைத்து மாநிலங்களது படித்த வர்க்கத்தின் பொது மொழியாக ஆனது, அப்படியாக இந்தியாவின் இணைப்பு
மொழியாக மாறியது.

இங்கிலீஷ் இல்லையென்றால் இந்தியாவே இல்லை. இது அதீத மதிப்பீடு இல்லை. ஆங்கிலம் இல்லையென்றால் அகில இந்திய கட்சிகளால் இயங்க முடியுமா? இந்தி பிரதேசம் தவிர பிற பகுதிகளோடு தொடர்பு கொள்ள தலைவர்களுக்கு எது கை கொடுக்கிறது? ஆங்கிலம்தானே. இன்றைய உலகமய நிலையில் ஆங்கிலத்தின் பயன்பாடு அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை.

எனவே அதைக் கைவிடத் தயாராயில்லாத அரசியல்வாதிகள் வம்பாக தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழிகளைப் படிக்கச் சொல்கிறார்கள். இப்படியாக மொழிச் சுமை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. ஆங்கிலப் பாடம் இல்லா பள்ளிக்கூடம் இந்தியாவில் எங்கே இருக்கிறது? பிறகு எதற்கு இந்தி? இந்திக்காரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரு மொழி போதும்; அதாவது தாய்மொழி, ஆங்கிலம்.

படித்தவரை இணைக்க ஆங்கிலம் இருக்கிறது, படிக்காதவரை இணைக்க மாநில மொழி இருக்கிறது.  அவர் எந்த மாநிலத்திற்கு வேலைக்கு போகிறாரோ அந்த மொழியை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் இயல்பானது, நியாயமானது. அந்தவகையில் பார்த்தால் மம்தா சொன்னது சரியே. மத்தியில் இந்தி ஆட்சிமொழி என்று அரசியல்சாசனத்தில் இருக்கிறது என்று இந்தி பேசாத மாநிலத்திற்கு போய் இந்தியில் பேசுவது என்ன நியாயம்? அவருக்காக இவர்கள் இந்தி கற்க வேண்டுமா?

தமிழகத்தில் சில அதிமேதாவிகள் அப்படித்தான் நினைக்கிறார்கள். “நான் உலகம் முழுக்க சுற்றி வந்திருக்கிறேன். எனது வீட்டு வடநாட்டு காவலாளியோடு என்னால் பேச முடியவில்லை” என்று ஒரு பிரபல நடிகர் வருத்தப்படுகிறார். அந்த ஒருவரோடு பேச இவர் ஏன் இந்தி கற்கவேண்டும்? அவர் தமிழ் கற்று விட்டால் இவரோடு மட்டுமல்ல
தமிழ்நாட்டில் அனைவரோடும் பேசலாமே!

வெளி மாநிலத்தவர்கள் தாம் வேலை செய்கிற மாநிலத்தின் மொழியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கற்றால்தான் அங்கே தொடர்ந்து வாழ முடியும் என்று ஒரு சட்டம் போட வேண்டும். இல்லையெனில் சொந்த மாநிலம் திரும்பட்டும். மொழிப் பிரச்னை
இப்போது உயிர்ப் பிரச்னையாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டு ரயில்வேயில் வேலை பார்க்கும் இருவருக்கிடையே ஏற்பட்ட மொழிப் பிரச்னையில் ஒரு பெரும் விபத்து நடக்கவிருந்தது. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களை விட்டுவிட்டார்கள்!

இதைத் தவிர்க்கிறோம் என்று சொல்லி தமிழ் நாட்டில் வேலை பார்க்கும் ரயில்வே ஊழியர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று ரயில்வே  நிர்வாகம் உத்தரவு போட்டது. தமிழ்நாட்டில் தமிழ் பேசக் கூடாதாம்-வெளிமாநிலத்
தவரும் வேலை பார்ப்பதால்! விஷயத்தை தலைகீழாகப் பார்க்கிறார்கள்! தமிழ்நாட்டு ரயில்வேயில் தமிழருக்கு மட்டும் வேலை கொடுங்கள். இல்லையெனில் தமிழ் கற்க
வேண்டும் எனும் நிபந்தனையோடு வெளி மாநிலத்தவருக்கு வேலை கொடுங்கள். இதுதான் இயற்கை நீதி.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றேன். விபத்து ஏற்பட்டால் என்னசெய்ய வேண்டும் எனும் அறிவுரைகளை பணிப்பெண் விளக்கினார். முதலில் இந்தியில் சொன்னார், பிறகு ஆங்கிலத்தில் சொன்னார். அத்தாடு முடித்துக் கொண்டார்.
விமானத்தில் தமிழ் மட்டுமே தெரிந்த பல ஆண், பெண்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அந்த சைகைகள் மட்டுமே மிச்சம். அதை வைத்துப் புரிந்து கொண்டால்தான் உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்காரர்களுக்கு தமிழால் பயனில்லை!
காரணம் பணிப்பெண்களுக்கு தமிழ் தெரியாது. ‘தமிழகத்திற்குள் பறக்கும் பணிப்பெண்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும், தமிழிலும் அறிவுரைகள் தர வேண்டும்‘
என்று உத்தரவுபோட ஒரு நாதியில்லை இங்கே! இங்கும் இது உயிர்ப் பிரச்னை.

அதுசரி, மதுரைக்குச் செல்லும் ரயிலுக்கு “தேஜஸ்” என்று இந்தியில் பெயர் வைத்தாலும் அதையும் சகித்துக் கொள்கிறவனாக ஆகிப்போனான் தமிழன். மம்தாவிற்கு இருக்கிற
சொரணை இங்குள்ள தலைவர்களுக்கு வருவது எப்போது? அவர்களிடமிருந்து இவன் உத்வேகம் பெறுவது எப்போது? வெப்பப் பெருமூச்சுதான் வருகிறது!
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *