- செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி பிரதமர் மோடி அடுத்த மாதம் வருகை தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய

சென்னை, ஏப்.12-
தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அடுத்த மாதம்(மே) பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்று  தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
இதுகுறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று, சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தேர்தல் பிரசார கூட்டம்
திருச்சியில் நாளை(புதன்கிழமை) பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில், எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம்(மே) தமிழகம் வருகிறார். அவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார். 20-க்கும் மேற்பட்ட தேசிய தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார்கள்.
50 வேன்களில் பிரசாரம்
தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வதற்காக 50 பிரசார வேன்கள் தயார் நிலையில் இருக்கின்றன. தமிழகத்தை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகள் எப்படி தமிழகத்தை ஆண்டது என்பது குறித்த விழிப்புணர்வு, பிரசாரம் வேன்கள் மூலம் செய்யப்படும். மோடியின் சாதனைகளும் இடம்பெறும். இந்த வேன் பிரசாரத்தை 12-ந் தேதி(இன்று) வண்டலூரில் தொடங்கி வைக்கிறோம்.
தாக்கம் இருக்காது
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும், தி.மு.க. ஆட்சியில் இருந்த போது செய்து இருக்க வேண்டியது. அப்போது வாய்ப்பு இருந்தும் செய்யாமல், இப்போது அவற்றையெல்லாம் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து இருக்கிறார்கள். அவர்களது தேர்தல் அறிக்கையில் தொலை நோக்கு பார்வையில்லை. அந்த அறிக்கை தமிழக மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
மின் துறையில் ஊழல்
படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று ஜெயலலிதா சொல்கிறார். படிப்படியாக உயிர்கள் போகட்டும் என்பது போல இருக்கிறது. மதுவிலக்கினால் ஏற்படும் இழப்பை வேறுவழியில் ஈடுசெய்யமுடியும். மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டதால் தான் தமிழகத்தில் இப்போது மின்வெட்டு இல்லை.
தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணியால் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இந்த கூட்டணியில் ஒருவர் போய் சேர்ந்தால் 4 பேர் வெளிபோய்விடுகிறார்கள். இதுதான் அந்த கூட்டணியின் பலமாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply