- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழக மக்களே வாக்களிக்கும் முன்பு ஒரு கணம் யோசியுங்கள்…

சென்னை, ஏப்.6-
தமிழக மக்களே வாக்களிக்கும் முன் ஒரு கணம் யோசியுங்கள் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கற்பனையல்ல
தமிழகத்தில்  தொழில் அமைச்சராக உள்ள தங்கமணி எனக்குப் பதில் கூறி ஒரு நீண்ட அறிக்கை கொடுத்துள்ளார்.  நான் வெளியிட்ட  அறிக்கையில்  ஏதோ உண்மைக்கு மாறான  விவரங்களைக் கூறி தமிழக மக்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறுகிறார்.   நான் விடுத்த அறிக்கையில் எந்தப் புள்ளி விவரங்களையும்  நானாகக் கற்பனை செய்தோ, இட்டுக்கட்டியோ கூறி விடவில்லை.   31-3-2016 அன்று ஆங்கில நாளேட்டில்,  வெளிவந்துள்ள    தகவல்களைத் தான் அப்படியே  எடுத்துக் கூறி, அவற்றுக்கு    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின்  விளக்கம் என்ன என்று கேட்டிருந்தேன்.
அந்த ஆங்கில நாளேடு,   மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தால்  அதிகாரப் பூர்வமாக  வெளியிடப்பட்ட  புள்ளி விவர அறிக்கையில் இருந்ததை எடுத்துக் காட்டி,  அந்த அறிக்கையிலே உள்ள விவரங்களை அப்படியே வெளியிட்டிருந்தது.  அந்தப் புள்ளி விவரங்களிலே ஏதாவது குறை என்றால்,  அ.தி.மு.க. அமைச்சர் விவரங்களை அறிக்கையாக வெளியிட்ட மத்திய அரசின் அமைச்சகத்திடம்  சென்று முட்டிக் கொள்ள வேண்டுமே தவிர,  என்னிடம் பாய்ந்து பிறாண்டி என்ன பயன்?
குறைந்த விலையில் நிலம்
தமிழக அரசின் தொழில் அமைச்சர்  "குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச்  சலுகையும் தருகிறோம் என்று சொல்லி, ஆந்திர மாநிலத்திற்கு அழைக்கிறார்கள்.  அது போல  ஆந்திர முதல்வர் இந்த வழியாகச் சென்னைக்கு வந்து செல்லும் போதெல்லாம் நம் தொழிலதிபர்களை அழைத்து குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம் என்று பேசுவார்"  என்று கூறினாரே, அதில் இருந்தே    தமிழகத்தின் நிலைமை என்ன என்று தெரிகிறதே.    அதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டுமே தவிர, எங்கள் மீது பாய்ந்து விழுந்து என்ன பயன் என்று நான் கேட்டிருந்தேனே. ஏன் அப்போது பதில் அளிக்கவில்லை?
முரண்பாடுகள்
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் 2,42,160 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கான 98 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும், அதில் 22,595 கோடி ரூபாய் முதலீட்டிலான 45  நிறுவனங்களின் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன  என்றும் தனது அறிக்கையில் அமைச்சர் கூறியிருக்கிறார்.  அப்படியென்றால், முதலமைச்சர் ஜெயலலிதா முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்த 2,42,160 கோடி ரூபாய் முதலீடுகளில்  வெறும்  22,595 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை மட்டுமே பெற்றதாகத் தானே அமைச்சரின் அறிக்கை கூறுகிறது.  முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,42,160 கோடி ரூபாய் முதலீடு என்று ஏட்டளவில் குறிப்பிட்டுவிட்டு,  பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டும், பத்தில்  ஒரு பங்கு மட்டும் தானே நடந்திருக்கிறது?   நிதி நிலை அறிக்கையிலும்,  முதலமைச்சர் அறிவிப்பிலும், தொழிலமைச்சர் அறிக்கையிலும் தமிழ்நாட்டின் முதலீடுகள் பற்றி ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றனவே?  அதற்கு அமைச்சரின் விளக்கம் எங்கே?
ஒரு கணம் யோசியுங்கள்

மத்திய அரசின் புள்ளி விவரத்தை எடுத்துக்காட்டி, ஆங்கில நாளேடு எழுப்பிய கேள்விகளை நான் எடுத்து எழுதி அதற்கு என்ன விளக்கம் என்று கேட்டதற்கு தொழில் அமைச்சர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.   மாறாக நான் ஏதோ பொய் கூறுவதாக அமைச்சர் அறிக்கையிலே கூறுகிறார்.  தமிழ்நாட்டு மக்களே, வாக்களிப்பதற்கு முன் ஒரு கணம் யோசியுங்கள்;   யார் கூறியது பொய் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply