- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை

சென்னை, மார்ச் 1-
`  தமிழக மக்கள் இன்னும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர்.  ஆனால், அவை எவையும் நிறைவேற்றப்படவில்லை.' என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, 2016-2017-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பன்முனை சவால்களை…
இந்த பட்ஜெட் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வெளியாகியுள்ளது. உலகில் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துவரும் இந்தியாவில், வளர்ச்சி விகிதமானது வேலை வாய்ப்புகளிலும், நல்வாழ்வுத் திட்டங்களிலும் விரும்பத்தக்க அளவு பிரதிபலிக்கவில்லை. வளர்ச்சி வேகத்தை நிலைநிறுத்துவது, ஏராளமான நிதி மற்றும் பொருளாதார சவால்களை சந்திப்பது, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது ஆகிய பன்முனை சவால்களை மத்திய நிதியமைச்சர் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

மகிழ்ச்சி

கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், 2015-2016-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில், திட்ட செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மாநில அரசுகளின் திட்ட செலவினங்களுக்கான தொகைகள் விரைவாக கிடைக்கும் என நம்புகிறேன்.
திட்டம் மற்றும் திட்டம் சாரா இனங்கள் என தனியாக பிரிப்பதைக் கைவிடவேண்டும் என தாம் தொடர்ந்து கூறிவந்த யோசனையை, மத்திய நிதியமைச்சர் ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதன்படி, 2017-18-ம் ஆண்டு முதல் இந்த பிரிவினை கைவிடப்பட்டு, அதற்கு பதில் வருவாய் மற்றும் மூலதன ஒதுக்கீடுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்க சீர்திருத்தமாகும்.
வேளாண் துறைக்கும், ஊரக வருமானத்திற்கும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 5 ஆண்டு காலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது.

நீர்ப்பாசன திட்டங்கள்

அதே சமயம், நடைமுறைக்கு ஏற்ற வகையில் இதனை செயல்படுத்தவேண்டும். நீர்ப்பாசன பரப்பளவை விரிவுப்படுத்துவது வரவேற்கத்தக்கதுதான், அதே நேரத்தில், பிரதம மந்திரி "கிரிஷி சின்சாய் யோஜனா" திட்டத்தின் கீழ் முடிவடையாத திட்டங்களுக்கு விரைவுப்படுத்தப்பட்ட பாசனத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடுகளை செய்வதன் மூலம், மாநில அரசுகளுக்கு வரவேண்டிய நிதி ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மாநிலங்களில் முடிவடையாமல் பல பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள் நிலுவையில் உள்ளன.
தமிழகம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே நதி மற்றும் ஏரி போன்ற மேற்பரப்பு பாசன ஆதாரங்கள் அநேகமாக முற்றிலுமாக பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த திட்டத்தால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதி கிடைக்காமல் போய்விடும். சொட்டுநீர் பாசனம், நுண்ணீர் பாசனம் ஆகியவற்றுக்கு அதிக ஊக்கம் அளிப்பதன் மூலம், நீர் பயன்பாட்டு முறையில் திறமையை அதிகரித்திருக்கலாம்.
பயிர் காப்பீட்டுத் திட்டம்
மத்திய பட்ஜெட்டில் மண்வளத்திட்ட விரிவாக்கம் மற்றும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஆகியவை விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே மண்வள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசும் இதனை அங்கீகரித்துள்ளது. பிரதமரின் "பயிர் காப்பீட்டுத் திட்டம்" வரவேற்கத்தக்க முயற்சி என்ற போதிலும், இதற்கு ரூ.5,500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானது அல்ல.
உணவு, உரம் ஆகியவற்றிற்கு மானியத்தொகையை பணமாக தராமல், நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை நான் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளேன். இந்த பொருட்கள் உரியவர்களுக்கு கிடைப்பதுதான் முக்கியமே தவிர, மானியத் தொகையில் சிக்கனம் செய்வது முக்கியம் அல்ல.
பிரதமரின் "கிராம சாலைகள் திட்டத்தின்" கீழ் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை கணிசமாக அதிகரிக்குமாறு நான் ஏற்கனவே பிரதமரை கோரியிருந்தேன். அதேபோல, தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தேன். இத்திட்டத்தின் கீழ் மத்திய நிதி விரைவில் தமிழகத்திற்கு விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.
எரிவாயு இணைப்பு
தேசிய ஊரக டிஜிட்டல் எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது – இத்திட்டத்தில் தமது செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசு தற்போது இப்புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. கணினி அறிவு பெற்றவர்கள், பெறாதவர்களிடையே உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும் என்பதை மத்திய அரசு தற்போது உணர்ந்துள்ளது.
5 கோடி ஏழை குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். இதன் மூலம் பெண்கள் அடுப்படியில் சிரமத்திற்கு உள்ளாகும் நிலைமை குறையும்.  இதே நோக்கத்துடன்தான், தமிழகத்தில் ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
குறைந்த விலையில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் தகுதியுடைய பயனாளிகளை கண்டறியும்போது, கணிசமான எண்ணிக்கையில் சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்கள் விடுபட்டு போய்விடக்கூடாது.
அம்மா மருந்தகம்
பிரதமரின் மருந்தகத் திட்டத்தின் கீழ், மூல மருந்துகளை விற்பனை செய்ய 3 ஆயிரம் புதிய மருந்து கடைகள் ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது எனது அரசால் தொடங்கப்பட்டுள்ள அம்மா மருந்தக திட்டத்தைப் போன்றதேயாகும்.
மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய ஏழை குடும்பங்களுக்கு புதிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த திட்டம், தமிழகத்திலுள்ள முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போன்றது ஆகும். எனவே, மத்திய அரசின் புதிய திட்டம், தமிழகத்திலுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு

கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆகிய துறைகளில் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.  இத்திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்தும்போது மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தேசிய இடைநிலை கல்வி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல.
தேசிய வேலைவாய்ப்பு சேவைத் திட்டத்துடன், மாநில வேலைவாய்ப்பு மையங்கள் இணைக்கப்படும் என்ற யோசனையும் வரவேற்கத்தக்கது. புதியதாக மாதிரி கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கான சட்டம் ஒன்று இயற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய நகல் சட்டம் இறுதியாக்கப்படுவதற்கு முன்பாக, மாநில அரசுகளுடன், சம்பந்தப்பட்டவர்களுடனும் விவாதிக்க வேண்டும்.

அடிப்படை கட்டமைப்பு

எனது அரசு அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு முன்னுரிமை அளித்து இருப்பதைப்போன்று அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன்.  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செயல்பாடு, இன்னமும் சற்று குறைபாடுள்ளதாகவே இருக்கிறது.
மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்தம் செய்து, நாடாளுமன்ற சட்டத்தின் மூலம்  சாலை போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டம், என்னை கவலையடையச் செய்கிறது.  இத்தகைய நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளோம்.
குறுக்கு வழி
அந்நிய நேரடி முதலீட்டை பொறுத்தவரையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களைச் சந்தைப்படுத்துவதில் 100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளிக்கும் திட்டமானது, சில்லறை வணிகத்தில் அன்னிற நேரடி முதலீட்டுக்கு குறுக்கு வழியை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது.  அதை நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன்.
சட்ட விரோதமாக சேமிப்பை ஏற்றுக் கொள்வதைக் கட்டுப்படுத்துவதற்காக விரிவான சட்டம் கொண்டுவரும் யோசனையை நாங்கள் வரவேற்கிறோம்.  பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்வதற்காக மொத்தம் ரூ.25,000 கோடி அளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பதையும் தேவைப்பட்டால், மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்ததையும் நான் வரவேற்கிறேன்.
வரிச் சலுகைகள்
நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மைச் சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன்.  இதை நான் பலகாலமாக வலியுறுத்தி வருகிறேன்.  மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படாத வரிகளின் மீது வீத வரி மற்றும் மேல்வரி விதிப்பதை மத்திய நிதி அமைச்சர் தவிர்க்காதது துரதிருஷ்டவசமானது.  சேவை வரி மீது "கிருஷ் கல்யாண் தீர்வை" விதிப்பது, வாகனங்கள் மீதான ஆயத்தீர்வைக்கு (கலால் வரிக்கு) கட்டுமான வீதவரி விதிப்பது, நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி மீது "தூய்மையான சூழல்" வரியை இருமடங்காக உயர்த்துவது, புதிய வரிவிதிப்புத் திட்டங்களிலும் மேல்வரியை விதிப்பது ஆகியவை பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் ஆகும்.  இந்தச் செயல்பாட்டை நான் விரும்பவில்லை.
பின்னோக்கிய அணுகுமுறை
மொத்தத்தில், வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.1060 கோடி மதிப்பிலான நேரடி வரிச் சலுகைகள் உள்ளன.  பெரும்பாலான வரிச் சலுகைகள் நிறுவன வருமான வரிச்சலுகைகளால் ஏற்படுகின்றன.  ரூ.20,670 கோடி மதிப்பிலான மறைமுக வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.  இது, குறிப்பிட்ட காலந்தோறும் விதிக்கப்படுகிற, பெட்ரோலிய தயாரிப்புப் பொருட்கள் மீதான மத்திய ஆயத்தீர்வை உயர்வுகளில் இது முதலிடம் வகிக்கிறது.  இத்தயாரிப்புப் பொருட்கள், பொருளாதார கருத்துக் கணிப்பின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மொத்த உற்பத்தியில் 90 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தியில் வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், இது வரவேற்க இயலாத ஒரு பின்னோக்கிய அணுகுமுறையாகும்.

தனிச்சிறப்பில்லை

மாநிலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் மகிழ்விக்கிற எவ்விதமான திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இல்லாத காரணத்தால், எந்த தனிச்சிறப்பையும் இந்த வரவு-செலவுத் திட்டம் பெற்றிருக்கவில்லை.  கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களின் செயல்பாட்டு நிலையை இது எடுத்துரைக்கவில்லை.  தமிழக மக்கள் இன்னும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர்.  ஆனால், அவை எவையும் நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply