- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டது

சென்னை, பிப். 26-
‘ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட் தவறிவிட்டது’ என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ரெயில்வே பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வியப்பு
2016-2017 ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் கணிசமான எதிர்பார்ப்புகளும், அச்சங்களும் கலந்து காணப்படுகிறது. சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கும், 7-வது ஊதியக் குழுவினால் ஏற்படக்கூடிய செலவுகளுக்கும் இடையே ரெயில்வே அமைச்சர் இந்தப் பட்ஜெட்டை தயாரித்துள்ளதாக தோன்றுகிறது. இந்தப் பட்ஜெட்டில் புதிய ெரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. புதிய ெரயில் பாதைகளும் அறிவிக்கப்படவில்லை. பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை இந்தப் பட்ஜெட் பொய்யாக்கியுள்ளது.
ரெயில்வேயின் மூலதனச் செலவு ரூ.1.21 லட்சம் கோடியாக கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ரெயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வியப்பளிப்பதாக உள்ளது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி தமது கடிதத்தில் கோரியுள்ள தமிழகத்துக்கான பல்வேறு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

வரவேற்பு
திட்டவட்டமான அறிவிப்புகளில், சென்னையில் நாட்டிலேயே முதலாவதாக, ஆட்டோ மொபைல் வாகனங்களுக்கான தலைமை மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் முக்கிய மோட்டார் வாகன உற்பத்தி மையம் என்ற சென்னையின் நிலை மேலும் வலுப்பெறும் என்பதுடன், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இதன் தாக்கம் இருக்கும். டெல்லியில் இருந்து சென்னை வரை வடக்கு-தெற்கு, தனி சரக்கு ரயில்பாதை அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன். இதனையும் விஜயவாடாவில் முடிவடையும் கிழக்கு கடற்கரை சரக்குப்பாதையையும், தூத்துக்குடி வரை நீட்டித்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சென்னை-தூத்துக்குடி இடையே சரக்கு போக்குவரத்திற்காக தனிப்பட்ட ெரயில் பாதை வேண்டும் என்ற தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை நிறைவேறி இருக்கும்.
தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணத்தின்படி, சென்னை-தூத்துக்குடி சரக்கு ெரயில் பாதை, சென்னை-மதுரை-கன்னியாகுமரி உயர்வேக பயணிகள் ெரயில் இணைப்பு மற்றும் கோவை-மதுரை உயர்வேக பயணிகள் ெரயில் இணைப்பு ஆகிய 3 திட்டங்களில் ரெயில்வே அமைச்சர் அறிவித்திருப்பது ஒன்றுதான். இந்த 3 திட்டங்களையும் பங்களிப்பு அடிப்படையில் செயல்படுத்த தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆக்கப்பூர்வமானது
ெரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த விரிவான கவனம் செலுத்தப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன். பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தருதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கது. ெரயில் பயணிகளின் குறைகளை களைய முற்றிலும் ‘ஆப்ஸ்’ அடிப்படையிலான நடைமுறைகள் உள்ளிட்ட மேலும் பல டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவது, ஆக்கப்பூர்வமானதே. அதேசமயம், இதுகுறித்து 2 விதங்களில் எச்சரிக்கை தேவை.
இதுபோன்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சிகளுடன் தொடங்கி வெற்றிகரமாக நடந்தால் மட்டுமே பயனளிக்கும். மேலும், பல குறைபாடுகளை களையும் அமைப்புகள் பிரத்யேகமாக டிஜிட்டல் அடிப்படையில் இயங்குவதாக தெரிகிறது.
பொது மற்றும் தனியார் கூட்டு ஏற்பாடுகள் தவிர்க்க முடியாதது என்றால், அதற்காக ரயில் பயணிகளுக்கான வசதிகளை உருவாக்காமல் இருந்துவிட முடியாது. மேலும், சமான்ய மனிதருக்கு டிஜிட்டல் முறை பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரிடம் ‘ஸ்மார்ட் போன்’ கூட இல்லாமல் இருக்கலாம். அதேசமயம் இதுபோன்ற சாதாரண மனிதர்களுக்கும் பயன்தரும் வகையில் ரெயில்வே சேவை தரம் மற்றும் குறைபாடுகளை களையும் திறன் ஆகியவை அமைய வேண்டும். சமூக வலைதளங்களில் தீவிரமாக உள்ளவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் அமைந்துவிடக்கூடாது.

புறக்கணிப்பு
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி யாத்திரை தலங்களில் உள்ள ரெரயில் நிலையங்களை மேம்படுத்துவதாக அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிளேன். ஆனால், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் போன்ற தமிழகத்தில் உள்ள மேலும் பல முக்கிய யாத்திரை தலங்களிலும் ரெரயில் நிலையங்கள் உள்ளன. அந்த ரெயில் நிலையங்களையும் மேம்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள வேண்டும். மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள புறநகர் ரயில் முனையங்களை மேம்படுத்த விரிவான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. என்றாலும், மும்பைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பயன்படுத்தி வரும் சென்னை புறநகர் ரெயில்வேயை மேம்படுத்துவதற்கு, மத்திய ரெயில்வே அமைச்சகம் எந்தவொரு குறிப்பிட்ட திட்டங்களையும் அறிவிக்காமல் இருப்பது ஒரு பெரும் புறக்கணிப்பாகும்.
கடந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் பெரும் ஆரவாரத்திற்கு இடையே, அறிவிக்கப்பட்ட வைர நாற்கர அதிவேக ரயில் போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். சாதாரண மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாத வகையில், இந்த ஆண்டு ரெயில் கட்டணத்தை ரெயில்வே அமைச்சர் உயர்த்தாதது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ெரயில் கட்டணம் பெரிதும் உயரும் என்ற அச்சத்திற்கு ரெயில்வே அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நம்பிக்கை
இரண்டு விஷயங்களில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். பட்ஜெட் மூலதனத்தை அதிகரித்திருப்பதுடன், சிறப்பான திட்ட நிர்வாக மேலாண்மை நடைமுறைகளை அமல்படுத்தினால், தமிழகத்தில் விழுப்புரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலான ஒட்டுமொத்த தொலைவிற்கும் இரட்டை வழிப்பாதை அமைப்பது உள்ளிட்ட தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ரெயில்வே திட்டங்கள் விரைந்து நிறைவு செய்யப்படும்.
இரண்டாவதாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த பன்முக மாதிரி திட்டமான தேசிய ரெயில்வே திட்டம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் நம்பிக்கை அளிக்கிறது. மாநில அரசுகளின் ஆலோசனை மற்றும் கவலைகள், நேர்மையான முறையில் உரிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன்.
இதன்மூலம், நாட்டின் உண்மையான கட்டமைப்பு முதுகெலும்பாக திகழும் இந்திய ரெயில்வே துறையிடமிருந்து, தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளும் முழு அளவிலான பலன்களை பெறமுடியும்.  ஒட்டுமொத்தமாக இந்த ரெயில்வே பட்ஜெட், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply