- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் நியமனம்

சென்னை, பிப்.7-
தமிழக பா.ஜ.க. தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் நியமிக்கப்படுவதாக கட்சித் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் முறையாக…
பா.ஜ.க. விதிகளின்படி மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் மாநிலத் தலைவராக இருக்க முடியாது. அதன்படி தமிழக பாஜக தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆனதால் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர், துணைத் தலைவராக பணியாற்றிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் தலைவராக பதவி ஏற்ற நாள் முதல் சிறப்பாக பணியாற்றியதோடு, தமிழக மக்களுக்காவும், தமிழக நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது பதவி காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வந்தது.
மீண்டும் நியமனம்
மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளதால் தமிழகத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டது. எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மாநிலத் தலைவர் பதவிக்காக பலரும் டெல்லியில் முகாமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுப்பட்டனர்.
தமிழக பா.ஜ.க.வுக்கு எச்.ராஜாவுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இருக்கிறது, அவர்தான் தமிழகத்தின் தலைவராக வருவார். வானதி சீனிவாசனுக்கு வாய்பு இருக்கிறது, அதேநேரத்தில் தமிழிசை சவுந்தரராஜன்தான் மீண்டும் தலைவராக வருவார் என்று பல கருத்துக்கள் உலாவியது.
இந்தநிலையில் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தமிழக தலைவராக நியமிக்கப்படுவதாக பா.ஜ.க. அகில இந்திய தலைவர் அமித் ஷா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறயுள்ள சூழலில்  தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது பணி முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply