- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை, பிப்.2-
தமிழக சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் ஏற்பாடு
தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை  தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் இந்திய தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர்கள் சென்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களுக்கு சென்று அந்த மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டனர்.
ஆலோசனை
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையில், ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி. ராவத்  உள்ளிட்ட அதிகாரிகள் வருகிற 10-ந்தேதி சென்னைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா நேற்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். அங்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், தலைமை தேர்தல் ஆணையர்கள் வருகை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply