- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. – காங். கூட்டணி உறுதியானது

சென்னை, பிப்.14-
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடுவதை அக்கட்சியின் மேலிடத் தலைவரான குலாம் நபி ஆசாத் சென்னையில் நேற்று தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின் உறுதி செய்தார்.
கருணாநிதியுடன் சந்திப்பு
சுமார் 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது தி.மு.க.வும், காங்கிரசும் அரசியல் களத்தில் மீண்டும் ‘கை’ கோர்த்துள்ளன. தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இந்த விஷயம் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடமும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஓசூர் கோபிநாத் ஆகியோர் நேற்று காலை 11.30 மணியளவில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க.தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றனர்.
மு.க.ஸ்டாலின் வரவேற்பு
அவர்களை தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோர் வாசலில் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு, கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்தித்துப்பேசினார். பின்னர் கருணாநிதியிடம் தி.மு.க.வுடன் கூட்டணி சேர தங்கள் கட்சி தயாராக இருப்பதை  தெரிவித்தார். மேலும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பேச்சுவார்த்தைக்கு பின் வெளியே வந்த குலாம் நபி ஆசாத் அங்கு திரண்டிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க தலைமையில் ஆட்சி
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலம் முதல் தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தி வரை மிகவும் போற்றத்தக்க தகுதி வாய்ந்த கூட்டணித் தலைவராக கருணாநிதி விளங்குகிறார். கடந்த காலங்களைப் போல தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்.
இதற்காக தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். தமிழகத்தில் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதே எங்கள் லட்சியம். ஆட்சி, அதிகாரத்தில்  பங்கேற்பது என்பது சிறிய விஷயம். அது எங்கள் லட்சியம் அல்ல. நாங்கள் ஓரணியில் சேர்ந்துள்ளோம். ஒரே குறிக்கோளுடன் போட்டியிட்டு வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவோம்.
தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணி கட்சிகள் இணைந்து வெற்றி பெறுவோம். யார் யாரை கூட்டணியில் சேர்ப்பது என்பதை தி.மு.க. தலைமையே முடிவு செய்யும். மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இடம் பெறுவது உறுதி. தொகுதி பங்கீடு, எத்தனைத் தொகுதிகள் என்பதும் பிரச்சினை இல்லை. எதிர்கட்சிகளை வீழ்த்த ஒன்றிணைவதே இப்போதைய குறிக்கோள்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

Leave a Reply