- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல் பணிக்கு விரைவில் மத்திய பாதுகாப்புபடை வருகிறது

சென்னை, மார்ச் 10-
தமிழக சட்டசபை தேர்தல் பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் விரைவில் வர உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரித்துள்ளார்.
பயிலரங்கு
சென்னை கடற்கரை சாலையிலுள்ள அகில இந்திய வானொலி  நிலையத்தில், வானொலி, தூர்தர்ஷனில் பணிபுரியும் மாவட்ட செய்தியாளர்களின்  பயிலரங்கு நடைபெற்றது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி  சிறப்புரையாற்றினார். வானொலி நிலைய கூடுதல் தலைமை இயக்குனர் ரவீந்திரநாத்  மிஸ்ரா, தென் மண்டல ஆலோசகர் வெங்கடேஸ்வரலு, துணை டைரக்டர் ஜெனரல் பேபி,  நிலைய இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
பிறகு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:-
பறக்கும் படை
தேர்தல் நன்நடத்தை விதிகளின்படி, தமிழகம் முழுவதும் போஸ்டர்கள், சுவரொட்டிகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் 13 ஆயிரம் உள்பட தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் போஸ்டர், சுவரொட்டி விளம்பரங்களை அகற்றி இருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் 1402 பறக்கும் படை தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் நடந்த சோதனையில் 110 கிலோ கஞ்சாவும் பிடிபட்டுள்ளது. தேர்தல் பணிக்காக வாகன சோதனை நடத்தும் போது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் சட்ட விரோத செயல்களும் தடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக போலீசார் 14 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ்களில் பணம் கொண்டு செல்லப்படுவது பற்றி சந்தேகம் வரக்கூடாது. அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் வேலை பார்க்க முடியாது. வாக்குச் சாவடியிலும் அதிகாரிகள்தான் இருக்கிறார்கள்.

பாதுகாப்பு படை வருகை

வாகன சோதனை அனைத்தும் வீடியோ எடுக்கப்படுகிறது. பொதுக்கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள் அனைத்தும் வீடியோ எடுத்து பத்திரப்படுத்தி வைப்போம். அரசியல் கட்சிகள் இதற்கு கணக்கு காட்ட வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய பாதுகாப்பு படையினர் விரைவில் வர உள்ளனர். பதட்டமான வாக்குச் சாவடிகளை தேர்தல் பார்வையாளர்கள் வந்து முடிவு செய்வார்கள். ஓட்டுப்பதிவு 28,000 வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ மூலமாகவும், 10,000 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா மூலமாகவும் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

Leave a Reply