- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழகத்தில் 86 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பு மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, பிப்.29-
தமிழகத்தில் 86 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
86 லட்சம் பேர்
தமிழக இளைஞர்களில் 86 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசு பணியிடங்கள் பலவற்றிலும் முறைகேடான நியமனங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு தனது ஆட்சி போகும் நேரத்தில் வேக வேகமாக செய்து வருகிறது. வெளிப்படைத் தன்மை இல்லாத இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
40 ஏ.பி.ஆர்.ஓ.க்கள்
அரசாங்கத்தில் எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குரிய தகுதிகளுடன் விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களைத் தவிர்த்து, பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கும் சந்தேகங்களுக்கும் வலு சேர்க்கும் வகையில் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத் துறையில் 40 ஏ.பி.ஆர்.ஓ.க்கள் பணி நியமனம் நடந்துள்ளது.
தி.மு.க. அரசு அமைந்தவுடன் இவைகுறித்து, முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அனைத்தும் சட்டப்படி மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் உரிய தகுதி உடையவர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, பணி நியமனங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply