- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழகத்தில் 746 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்பட மாட்டாது

சென்னை, மார்ச். 8-
கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி  செய்யாத 746 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
வழக்கு
மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்  அவர் கூறியிருப்பதாவது:-
விதிமுறைகளின்படி குறைந்தபட்ச நில அளவு, கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு 2016-ம் ஆண்டு மே 31-ம் தேதி வரை செயல்பட தமிழக  அரசு தற்காலிக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி இரு அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், அங்கீகாரம் இல்லாத அனைத்து மெட்ரிக்குலேசன் பள்ளிகளையும், 2015-2016-ம் கல்வியாண்டின் இறுதியில் மூடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு  மனுவில் கூறியிருந்தார்.
அரசு பதில் மனு
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ேக.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளி கல்வித்துறை சார்பில் இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கல்வித்துறை கூறியிருப்பதாவது:-
மனுதாரர் கூறியுள்ள 746 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் படிக்கும் 5 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இவ்வாறு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட மாட்டாது
விசாரணையின்போது அரசு வக்கீல் வாதாடுகையில், 746 பள்ளிகளுக்கும் இனி தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply