- செய்திகள், மாநிலச்செய்திகள், வானிலை செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைகாலம் முடிந்தது சராசரியை விட 53 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் பேட்டி…

சென்னை, ஜன. 1-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் சராசரி அளவை விட வானிலை மைய ஆய்வின்படி பார்க்கும்போது, 53 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது என்று  வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில், வழக்கமாக வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் 1-ந் தேதி தொடங்கும். ஆனால் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பொதுவாக, வடகிழக்கு பருவமழையால் தமிழகத்திற்கு சராசரியாக 44 செ.மீ மழை கிடைக்கும். இந்த வருடத்தில், நேற்று வரை 68 செ.மீ மழை பெய்துள்ளது. இது வானிலை ஆய்வு மைய கணக்குப்படி, வழக்கமான சராசரி அளவை விட 53 சதவீதம் கூடுதலாகும்.
வடகிழக்கு பருவ மழையின் கூடுதல் மழைக்கு முக்கிய காரணம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவானது. இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றதாலும் மேலும் தமிழகத்திற்கு அருகில் நிலைகொண்டதுமே கூடுதல் மழைக்கு முக்கிய காரணம். அந்தமான் பகுதியில் வெப்பம் குறைவாக இருந்ததும் கூட கூடுதல் மழை பெய்ய ஒரு காரணமாக அமைந்தது.
உள்மாவட்டங்களில்…
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் வடக்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்தாலும் மதுரை, சிவகங்கை கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அந்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அதற்கு முக்கிய காரணம் இலங்கையை ஓட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் எந்த காற்றழுத்தங்களும் உருவாகாததே. பொதுவாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்த காலத்தில் எல்லாம் மன்னார் வளைகுடா பகுதியில் உருவான நிகழ்வுகள் மூலம் தான்.
இவ்வாறு ரமணன் கூறினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் மாவட்ட அளவிலான அளவுகள் (அக்டோபர் 1- டிசம்பர் 31)
மாவட்டங்கள்      பெய்ய வேண்டிய அளவு      பெய்துள்ள அளவு                    சராசரியில்
காஞ்சிபுரம்                64 செ.மீ                                         181செ.மீ                                      183% அதிகம்
திருவள்ளூர்             59  செ.மீ                                          146  செ.மீ                                     149% அதிகம்
நெல்லை                   47 செ.மீ                                          105செ.மீ                                      125% அதிகம்
வேலூர்                       35 செ.மீ                                           75 செ.மீ                                     114% அதிகம்

சென்னை                   79 செ.மீ                                          160செ.மீ                                      104% அதிகம்

கடலூர்                        70 செ.மீ                                          124 செ.மீ                                      78%  அதிகம்

தூத்துக்குடி                42 செ.மீ                                          66செ.மீ                                          56% அதிகம்

தஞ்சாவூர்                  55 செ.மீ                                          69செ.மீ                                          26 % அதிகம்

கோவை                      33 செ.மீ                                         34 செ.மீ                                          4% அதிகம்

மதுரை                         42 செ.மீ                                         41 செ.மீ                                          -1% குறைவு

புதுச்சேரி                     91 செ.மீ                                       142 செ.மீ                                          61% அதிகம்
———————————————-

நவம்பரில் கூடுதல் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 3 மாதங்களின் மழை அளவு

மாதம்                    பெய்ய வேண்டிய அளவு      பெய்துள்ள அளவு               சராசரியில்

அக்டோபர்              18 செ.மீ                                        13 செ.மீ                                  26% குறைவு

நவம்பர்                    17 செ.மீ                                        39 செ.மீ                                  125% அதிகம்

டிசம்பர்                     9 செ.மீ                                          16 செ.மீ                                   76%  அதிகம்

—————————

மீனம்பாக்கத்தில் புதிய பதிவு

வடகிழக்கு பருவமழையால் மீனம்பாக்கத்தில் கடந்த 1985-ம் ஆண்டு நவம்பர் மாதம் 107 செ.மீ பெய்ததே இதற்கு முன்பு பருவமழையால் நவம்பர் மாதத்தில் பெய்த அதிக மழை பொழிவாக இருந்தது. இந்தநிலையில் இந்த வடகிழக்கு பருவமழையால் கடந்த நவம்பர் மாதத்தில் 114 செ.மீ மழை பெய்தது. இதன் மூலம் 30 வருடங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் நவம்பர் மாதத்தில் பெய்த அதிக மழை பொழிவு என்ற புதிய பதிவையும் இந்த வடகிழக்கு பருவமழை பதிவு செய்துள்ளது.

Leave a Reply