- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழகத்தில் பா.ம.க.ஆட்சி அமைந்தால் காலியாக உள்ள 5 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்

சென்னை, பிப்.3-

தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைந்தால் 5 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவதுடன், பல்வேறு சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை ஒழிக்கப்படும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இதுதொடர்பாக, பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலைக்காக காத்திருப்போர்
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துவிட்டு பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 லட்சம் பேர் வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்ற போதிலும், சுயவேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுதல், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம்.
ஆனால், 110-வது விதிப்படி அறிக்கை படிப்பதை தவிர வேறு எந்த வேலையும் செய்யாத முதல்வர் ஜெயலலிதா, வேலைவாய்ப்பை பெருக்க எதையும் செய்யவில்லை. தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிகள் காலியாக இருந்தும் அவை நிரப்பப்படவில்லை.

இலவசங்களை வழங்கினால் வறுமை ஒழிந்துவிடும் என்ற திராவிடக் கட்சிகளின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொள்கைகள் பயனளிக்காது என்பதைத்தான் அதிர்ச்சியூட்டும் இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பா.ம.க.ஆட்சியில்….

தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைத்தால் காலியாக உள்ள 5 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவதுடன், பல்வேறு சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள், சிறப்புக் கடன் திட்டங்கள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை ஒழிக்கப்படும். இதன்மூலம் வறுமையில்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

Leave a Reply