- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழகத்தில் தொழில் தொடங்க எத்தனை நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது?

சென்னை, ஏப்.1-
முதலீட்டாளர்கள் மாநாட்டில் சொன்னது போல் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு எத்தனை நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதலீட்டாளர் மாநாடு
2015-ம் ஆண்டு செப்டம்பர்  9, 10 ஆகிய நாட்களில்,  சென்னை மாநகரில்,  தமிழக அரசின் சார்பில்  100 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை  முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தினார்.
அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, "இந்திய நாட்டில், தமிழ்நாடு மிக முன்னேற்றமான,  தலைசிறந்த, அனைத்துத்  தொழில் திறன்களிலும்  வெற்றி பெறுகின்ற  மாநிலமாகத் திகழ்கிறது.  இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்திறன்களில், தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது.   வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகமாகப் பெறுகின்ற 3-வது மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது"  என்று குறிப்பிட்டார்.
விளக்கம்
ஆனால் தமிழக அரசும், குறிப்பாக அதன் முதல்-அமைச்சரும் என்னென்ன கூறினார்கள்? முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,42,160 கோடி ரூபாய்க்கான முதலீடு பெறப்பட்டதாக  முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொழில் அதிபர்களை வைத்துக் கொண்டு பெருமையோடு அறிவித்தார். ஒவ்வொரு முதலீட்டிற்கும்  30 நாட்களுக்குள் ஒப்புதல்கள் வழங்கப்படும் என்று அந்த மாநாட்டில் ஜெயலலிதாவே உறுதி கூறினார்.
அவ்வாறு கூறி 30 நாட்கள் அல்ல,  ஆறு மாதங்கள் ஓடி  விட்டன.  உறுதியளித்தபடி  எவ்வளவு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன?  ஒப்புதல் வழங்கப்பட்ட முதலீடுகளில், எத்தனை கோடி ரூபாய்க்கான முதலீடுகள் செயலாக்கத்திற்கு  வந்துள்ளன?   எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன?  முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ் நாட்டு மக்களுக்கு  இனியாவது  விளக்கம் அளிப்பாரா?
இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.

Leave a Reply