- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தக்கூடாது

சென்னை, மார்ச் 30-
தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதற்கு என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சட்டவிரோதம்
தமிழ்நாட்டில் மொத்தம் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 26 சுங்கச்சாவடிகளின் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ந் தேதியும், 18 சுங்கச்சாடிகளின் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ந் தேதியும் உயர்த்தப்படுகின்றன.
அதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தூத்துக்குடி, வேலூர், நெல்லை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம்  ஆகிய மாவட்டங்களில் உள்ள 18 சுங்கச்சாவடிகளில் சாலைக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.25 வரை உயர்த்தப்படவுள்ளது. இந்தக் கட்டண உயர்வு முறையற்றது மட்டுமின்றி சட்டவிரோதமானதும் ஆகும்.
கருணையற்ற செயல்
முதலீடு எடுக்கப்பட்ட பிறகும் 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படுவது சட்டவிரோதம் ஆகும். இதுவே சட்டவிரோதம் எனும் போது ஆண்டுக்கு ஒருமுறை  10 முதல் 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவது கருணையற்ற செயல் ஆகும். தமிழ்நாட்டில் மட்டும்  தான் இப்படி என்று கூற முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமை சுமத்தப்படும். ஒருபுறம் வறுமையை ஒழிக்கப்போவதாகக் கூறிக் கொண்டு மறுபுறம் வறுமையை அதிகரிக்கும் வகையிலான இத்தகைய செயல்களில் ஈடுபடுவது முறையா? என்பதை மத்திய ஆட்சியாளர்கள்  சிந்தித்து பார்க்க வேண்டும்.
கோரிக்கை
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி,  ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தணிக்கையாளர்கள், மக்கள் அடங்கிய  குழுவை அமைத்து சுங்கச்சாவடியின் வருவாயை பொதுத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புக்காக 20 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply