- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழகத்தில் இதுவரை ரூ.82 கோடி பறிமுதல் ராஜேஷ் லக்கானி தகவல்…

சென்னை, 6-
தமிழகத்தில் இதுவரை ரூ.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தொடரும் சோதனை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைமுறைகளையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் பறக்கும் படையும், நிலையான கண்காணிப்புக்குழுவும் மாவட்டங்களில் தொடர்ந்து சோதனை செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இதன்படி மே 3-ந் தேதி பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டபோது, வேலூர் மாவட்டத்தில் ரூ.3.40 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1.4 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், ரூ.1.61 லட்சம் மதிப்புள்ள உணவு எண்ணெய், திருச்சி மாவட்டத்தில் ரூ.7.72 லட்சம், திருவண்ணாமலையில் ரூ.5.10 லட்சம், ராமநாதபுரத்தில் ரூ.3.70 லட்சம் மற்றும் அரியலூரில் ரூ.63.65 லட்சம் உட்பட மொத்தம் ரூ.32.63 கோடி கைப்பற்றப்பட்டது.
ரூ.82 கோடி பறிமுதல்
மேலும் நிலையான கண்காணிப்புக்குழு சோதனையில் 3-ந் தேதி திருச்சி நகர்பகுதியில் ரூ.3.18லட்சம், தேனி மாவட்டத்தில் ரூ.4 லட்சம்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2 லட்சம்,  அரியலூர் மாவட்டத்தில் ரூ.3.31 லட்சம்,   மதுரை மாவட்டத்தில் ரூ.1.97 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் உட்பட மொத்தம் ரூ.14.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 3-ந் தேதி வரை பறக்கும் படையினரால் ரூ.29.28 கோடி, நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ.30.39  கோடி, காவல் துறையினரால் ரூ.45 லட்சம், வருமான வரித்துறையினரால் ரூ.21.85 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply