- சினிமா, செய்திகள்

தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிப்பேன்

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்யை அடுத்து அதிகம் குழந்தை ரசிகர்களைக் கொண்டவர் சிவகார்த்திகேயன். `மெரீனா' படம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்து ஒடிக்கொண்டிருக்கும் `கஜினிமுருகன்' வரையிலும் அவருக்கு அமைந்த கதைகள் அப்படி. இது தானாகவே அமைந்ததா? அல்லது அவரே அமைத்துக் கொண்டாரா என்பது திரையுலக ஆச்சரியங்களில் ஒன்று. ஆனால் சிவகார்த்திகேயனைக் கேட்டால், “எனக்கு என்ன வரும் என்பதை கணித்த இயக்குனர்கள் தான் இதில் என்னை வடிவமைத்தனர். அதனால் இது, அதுவாகவே அமைந்தது'' என்கிறார்.

ரஜினிமுருகன் படம் வெளிவந்த நேரத்தில் என்ன மாதிரியான உணர்வில் இருந்தீர்கள்?

“ரசிகர்களைக் கவரக் கூடிய ஜனரஞ்சகமான படம். `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்துக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதே படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உடனடியான தொடங்கிய படம் அது. ஆனால் படம் உருவாகி ரிலீசுக்குத் தயாரான நேரத்தில் தடைகள் தொடங்கியது. `இதோ வரும்…அதோ வரும்..' என்று எதிர்பார்த்த ஒவ்வொரு தருணத்திலும் தள்ளித் தள்ளி போய்க் கொண்டிருந்தது. கடந்த 10 மாதங்கள் நீடித்த இந்தப் போராட்டம் இந்தப் பொங்கலில் தான் முடிவுக்கு வந்தது. படம் வெளியான அன்று தான் நான் நிம்மதியாகத் தூங்கினேன். ஒரு நல்ல படைப்பு எந்தக் காரணத்துக்காக வராமல் தடைபட்டாலும் அதன் பாதிப்பு படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் பாதிக்கவே செய்யும்.  படத்தின் ஹீரோவாக அந்த பாதிப்பை நானும் அனுபவித்தேன். இப்போது படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த மகத்தான ஆதரவு, கடந்த கால கவலைகளை போக்கி விட்டது.''

இந்தப் பட ரிலீசில் உங்கள் பங்கு எந்த அளவு இருந்தது?

“படத்தின் நிதிப் பிரச்சினைக்கு எந்த விதத்திலும் நான் காரணம் இல்லையென்றாலும் என் சம்பளத்தை விட்டுக் கொடுத்தேன். சினிமாவில் நான் நடிப்பதே என் படம் வெளியாகி ரசிகர்கள் கைதட்டி ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான். சம்பளம் எனக்கு முக்கிய விஷயமில்லை. அதோடு பெரிய தேவைகளும் எனக்கில்ைல. சமீபத்தில் என் மனைவி என்னிடம் ஒரு ஐபோன் கேட்டார். வாங்கிக் கொடுத்தேன். பெரிய ஆசைகள் என் குடும்பத்துக்கும் இல்லை என்பதற்காக இதை குறிப்பிட்டேன்.''

சினிமாவுக்கு வர உங்களுக்கு எது தூண்டுதலாக அமைந்தது?

“இதற்கு என் பதிலாக ரஜினி சாரைத்தான் சொல்வேன். அவர் படம் தான் என் சின்ன வயசில் இருந்தே என்னை சிினிமாவுடன் நெருக்கமாக்கியது. அவர் படம் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமும் அவர் தான். என் வாழ்க்கையில் எனக்கு அம்மா எவ்வளவு முக்கியமாக இருந்தாரோ அதுமாதிரி சினிமாவில் ரஜினி சார். இப்போதும் அவர் படம் ரிலீசாகிற நாளில் முதல் காட்சி பார்க்கும் அவரது தீவிர ரசிகன் நான்.''
கதையை தேர்ந்தெடுக்கும்போது எதையெல்லாம் கவனிக்கிறீர்கள்?
“குழந்தைகளை கவருகிற மாதிரி, காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகள். அதில் அழகான ஒரு காதலும் இருக்கும்.''

சிவகார்த்திகேயன் கேட்கிற சம்பளம் என் கம்பெனிக்கு கட்டுப்படியாகாது என்கிறாரே தனுஷ்?

“எதனால் அப்படிச் சொன்னார் என்று தெரியாது. ஆனால் அவர் அழைத்தால் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்.''

அடுத்த படம்?

“புதியவர் பாக்யராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதில் மூன்று வித கெட்டப்பில் வருகிறேன். என் ரசிகர்களை கவரும் கதை என்பது மட்டும் நிச்சயம்.''

Leave a Reply