- செய்திகள், வணிகம்

தண்ணீர் பஞ்சத்ால் தொழில் உற்பத்தி பாதிக்கும் நிபுணர்கள் எச்சரிக்கை

மும்பை, ஏப்.15:-

தண்ணீர் பஞ்சத்தால் அடுத்த 2 முதல் 3 மாதங்கள் வரை தொழில்துறை உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். உற்பத்தி 0.50 சதவீதம் வரை சரிவடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதாரம்

வறட்சி நிலைமையால் வேளாண் துறை மட்டுமின்றி தொழில்துறை உற்பத்தியும்  கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகி  உள்ளது.

உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள், ஜவுளி, பேப்பர் ஆகிய 3 துறைகளும் தண்ணீர் இல்லாமல் இயங்காது. தொழில்துறை உற்பத்தியில் இந்த 3 துறைகளின் பங்கு 14.4 சதவீதமாக உள்ளது. தற்போதைய தண்ணீர் பற்றாக்குறையால் இந்த துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் அடுத்த 2 முதல் 3 மாதங்கள் வரை தொழில்துறை உற்பத்தி 0.40 முதல் 0.50 சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சப்ளை நிறுத்தம்

நமது தொழில்துறை மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் தண்ணீர் பஞ்சத்தால் ஜவுளி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநில ஜவுளி ஆலை தொழிலாளி ஒருவர் இது குறித்து கூறுகையில், `தண்ணீர் பஞ்சத்தால் ஆலைக்கு டேங்கர்களில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் அதிக செலவாகிறது. தற்போது உற்பத்தி வழக்கமான அளவை காட்டிலும் குறைந்துள்ளது. தற்போது நஷ்டத்தை தவிர்க்கும் நோக்கில் தண்ணீர் சப்ளை இல்லாத நாட்களில் ஆலை மூடப்படுகிறது' என்று தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் வரும் மாதங்களில் தொழில்துறை உற்பத்தி சரிவை சந்திக்கும் என்ற நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில்துறை உற்பத்தி குறைந்தால் அதன் தாக்கம் பொருளாதார வளர்ச்சியில் வெளிப்படும். எனவே தற்போதைய தண்ணீர் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய தடைக் கல்லாக உருவெடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

Leave a Reply