தண்ணீர் கொள்ளை தடுக்கப்படணும்…!

மனித குலம் இந்தப் பூமியில் உயிர் வாழ்வதற்கு இயற்கை வழங்கிய கொடைதான் தண்ணீர்.  என்னதான் விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் முன்னேறி இருந்தாலும், இயற்கையை வெல்லக் கூடிய ஆற்றல் இன்னும் மனிதனால் பெற முடியவில்லை என்பதுதான் உண்மை நிலையாகும்.  தொலைத் தொடர்பு மருத்துவம் மற்றும் பிற அறிவியலில் அதீத முன்னேற்றம் கண்டிருக்கின்ற மனிதன், தான் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாக இருக்கின்ற தண்ணீரை அவனால் ஒரு டம்ளர் கூட உற்பத்தி செய்ய இயலாது.

இயற்கை வழங்கிய தண்ணீரை சுத்தப்படுத்தத்தான் ஆயிரம் கருவிகள் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர, தாகத்திற்கு ஒரு டம்ளர் தண்ணீர் தயாரித்து வழங்கும் ஆற்றல் மனிதனுக்கு இன்று வரையில் கிடையாது.  இயற்கை பொழிகின்ற மழை நீர், அதன் மூலம் உருவாகின்ற ஆறுகள் இவைகளால் உண்டாகும் நிலத்தடி நீர் போன்றவைகளால் மட்டுமே மனிதனின் தேவைக்கு தண்ணீர் கிடைக்கிறது.

இயற்கை தந்த கொடையான தண்ணீரை மனிதன், என்றைக்கு விற்பனைப் பொருளாக மாற்றினானோ அன்றிலிருந்து நீர் ஆதாரக் கொள்ளைகளும் தொடங்கி விட்டன.  நிலத்தடி நீர் மட்டம் வளமாக இருக்கும் பகுதிகளை விலைக்கு வாங்கி, ராட்சச ஆழ் துளைக் கிணறுகளை அமைத்து, அதன் மூலம் தினம்தோறும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் விற்பனை என்பது தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

காசு இருந்தால் எத்தனை லிட்டர் தண்ணீர் வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிற வணிகம் இன்னொருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  2028-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 17 மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலுமாக வற்றி விடும் அபாயம் இருப்பதாக மத்திய அரசின் திட்டக் கமிசன் தகுந்த ஆதாரங்களுடன் கணக்கிட்டு அறிவித்துள்ளது.

இதில் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது என்கிற செய்திதான் அனைவரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.  இந்த அபாய அறிவிப்பைத் தொடர்ந்துதான் 2014-ம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுப்பதற்கான சில வழிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிட்டது.  அதன் அடிப்படையில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் முறையாக அரசிடம் விண்ணப்பித்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு தண்ணீர் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவிப்பானை வெளியிட்டது.

இதை எதிர்த்து, 75 தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் தமிழக அரசின் ஆணை செல்லாது என வழக்கு தொடர்ந்தனர்.  நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு என்றும் மேலும் தண்ணீர் என்பது தனியாருக்கான சொத்து அல்ல.  அது மக்களின் சொத்தாகும்.  நிலத்தடி நீர்மட்டத்தைக் காப்பாற்ற தமிழக அரசு உத்தரவிட்ட தடையில்லா சான்று உள்ளிட்ட அனைத்துமே செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இருந்த போதும் தமிழக அரசின் கவனத்திற்கு வராமலேயே புறநகர் பகுதிகளில் தண்ணீர் திருடி விற்பது தொடர்கிறது.

சமீபத்தில் திருவள்ளுர் மாவட்டம் கோனாம்பேடு பகுதியிலும் இதுபோன்ற தண்ணீர் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோனாம்பேடு கிராம மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் அதன் மூலம் தண்ணீரை எடுத்து டாங்கர் லாரிகளில் நிரப்பி விற்பனை செய்வதை அரசு தீவிரமாகக் கண்காணித்து தடைசெய்து, உரிய வழக்கைப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவதூறு வழக்குகள் பாயும் என்றும் நீதிபதிகள் கோபமாகத் தெரிவித்துள்ளனர்.  நாம் தற்போது விழித்துக் கொள்ளவில்லை என்றால் எதிர்கால தலைமுறையினருக்கு மட்டுமல்ல, நம் தலைமுறையினருக்கே தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  உண்மைதான். எல்லாவற்றையும் விட மனித உயிர் முக்கியமானது.  அந்த உயிருக்கு தண்ணீர்தான் இன்றியமையாதது. அதைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்குமே உண்டு.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *