- உலகச்செய்திகள், செய்திகள்

தங்கம் விலை திடீர் உயர்வு ஒரே நாளில் பவுனுக்கு 920 ரூபாய் அதிகரிப்பு ரூ.22 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, பிப்.13:-
தங்கம் விலை நேற்று திடீர் ஏற்றம் கண்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு 920 ரூபாய் அதிகரித்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை மீண்டும் 22 ஆயிரத்தை தாண்டியது.
டாலரில் நிர்ணயம்
நம் நாட்டின் தங்கம் உற்பத்தி சொற்பமான அளவிலே நடைபெறுகிறது. எனவே உள்நாட்டின் மொத்த தங்க தேவையில் பெரும் பகுதி இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரில் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரியும் போது தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
இது தவிர, தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும் போதும் அதன் விலை உயரும். பொதுவாக, பண்டிகை, திருவிழா, கல்யாண காலங்களில் மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்குவர். எனவே அந்த காலங்களில் தங்கத்துக்கான தேவை உயரும். இதனால் அந்த காலங்களில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கும்.
தேவை
தற்போது கல்யாண சீசன் தொடங்கி விட்டதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த 2 காரணங்களால் தங்கத்தின் விலை நேற்று விறுவிறுவென ஏற்றம் கண்டது.
சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு 115 ரூபாய் உயர்ந்து 2 ஆயிரத்து 768 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இது 2 ஆயிரத்து 653 ரூபாயாக இருந்தது. தங்கம் பவுனுக்கு 920 ரூபாய் உயர்ந்து 22 ஆயிரத்து 144 ரூபாயாக அதிகரித்தது. கடந்த வியாழக்கிழமையன்று இது 21 ஆயிரத்து 224 ரூபாயாக இருந்தது.
வெள்ளி
வெள்ளியின் விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் அதிகரித்து 41 ரூபாய் 20 காசுகளாகவும், வெள்ளி கிலோவுக்கு ஆயிரத்து 425 ரூபாய் ஏற்றம் கண்டு 38 ஆயிரத்து 525 ரூபாயாகவும் உயர்ந்தது.

Leave a Reply