- செய்திகள், வணிகம்

தங்கம் பவுனுக்கு 176 ரூபாய் உயர்ந்தது மீண்டும் 22 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, மார்ச்.1:-
தங்கத்தின் விலை நேற்று திடீரென உயர்ந்தது. பவுனுக்கு 176 ரூபாய் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை மீண்டும் 22 ஆயிரத்தை தாண்டியது.
கலால் வரி
மத்திய பட்ஜெட்டில் பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மீது கலால் வரி 1 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க நகைகள் விலை உயரும். ஏற்கனவே தங்கம் விலை  உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதற்கு மேலும் அடித்தளம் அமைத்து கொடுத்தது போல் அமைந்து விட்டது.
இந்த நிலையில் கல்யாண சீசன் காரணமாக தங்கத்துக்கான தேவையும் அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு  கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதால் தங்கத்தின் விலை உயர்ந்தது.
சென்னையில் தங்கத்தின் விலை  கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 765 ரூபாயாக உயர்ந்தது. இது நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 743 ரூபாயாக இருந்தது. தங்கம் பவுனுக்கு 176 ரூபாய் ஏற்றம் கண்டு 22 ஆயிரத்து 120 ரூபாயாக அதிகரித்தது. கடந்த சனிக்கிழமையன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை 21 ஆயிரத்து 944 ரூபாயாக இருந்தது.
வெள்ளி
தங்கத்தின் விலை நேற்று உயர்ந்துள்ள போதிலும், வெள்ளியின் விலை குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் குறைந்து 39 ரூபாய் 20 காசுகளாகவும், வெள்ளி கிலோவுக்கு 725 ரூபாய் வீழ்ச்சி கண்டு 36 ஆயிரத்து 605 ரூபாயாகவும் குறைந்தது.

Leave a Reply