- செய்திகள், வணிகம்

தங்கம் இறக்குமதி குறைந்தது நகை வியாபாரிகள் போராட்டம் எதிரொலி

புதுடெல்லி, மே 5:-
கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி சுமார் 67 சதவீதம் சரிவடைந்துள்ளது. நகை வியாபாரிகள் மேற்கொண்ட தொடர் போராட்டம் காரணமாக தேவை குறைந்ததே இதற்கு காரணம்.

19 டன்

எம்.எம்.டி.சி. பாம்ப் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியதாவது:-

2016 ஏப்ரல் மாதத்தில் 19.6 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 67 சதவீதம் குறைவாகும். கடந்த 2015 ஏப்ரல் மாதத்தில் 60 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

கலால் வரி

வெள்ளி அல்லாத தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளுக்கு 1 சதவீத கலால் வரி விதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் 2 முதல் நகை வியாபாரிகள் தொடர் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 42 நாட்கள் நீடித்தது. இதனால் தங்கத்துக்கான தேவை குறைந்தது. மேலும், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாத கையிருப்பை பயன்படுத்தியது போன்ற காரணங்களால் இறக்குமதி குறைந்துள்ளது.

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 750 டன் தங்கம் இறக்குமதியாகி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் குறைவாகும். அந்த நிதி ஆண்டில் 971 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply