- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

‘டீ’ கேனில் மறைத்து எடுத்து வந்த 2 1/2 கிலோ தங்கம் பறிமுதல் ரூ. 20 லட்சம் பணமும் சிக்கியது

மீனம்பாக்கம், ஏப். 1–- சென்னை விமான நிலையத்தில் ‘டீ’ கேனில் மறைத்து கடத்தி வந்த இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ. 20 லட்சம் பணமும் சிக்கியது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
டீ கேனில் தங்கம்
அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். கேரளாவைச் சேர்ந்த
பரம்பாத் கண்டி என்பவர் கொண்டு வந்த ‘டீ’ கேன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவும் அதை நன்கு சோதனை செய்தனர்.

டீ கேனில் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அதில் இருந்த மொத்த தங்க கட்டிகளின் எடை 2½ கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.75 லட்சம். தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரம்பாத் கண்டியை கைது செய்து, யாருக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.20 லட்சம் பணம்
இதையடுத்து சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு விமானம் புறப்பட்டது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின்  உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். பயணிகளில் மதுரையைச் சேர்ந்த புகாரி, காஜா மொய்தீன் ஆகியோரின் கைப்பையை பிரித்து பார்த்து சோதனையிட்டனர்.

அதில் கட்டுக் கட்டாக ரூ. 20 லட்சம் பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 20 லட்சத்திற்கான காரணங்களை அவர்கள் தெரிவிக்கவும் இல்லை, பணத்திற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை. இதையடுத்து ரூ. 20 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மதுரை பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சட்டசபை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வரும்  நேரத்தில் மதுரையை சேர்ந்த 2 பேர் ரூ. 20 லட்சத்துடன் விமான நிலையத்தில்  சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply