- செய்திகள், விளையாட்டு

டி20 உலகக்கோப்பை போட்டியில் 2-வது முறையாக மே.இ.தீவுகள் சாம்பியன் ‘பட்டைய கிளப்பிய’ பிராத்வெய்ட், ‘சூப்பர்’ சாமுவேல்ஸ்

கொல்கத்தா, ஏப். 4:-
ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைப் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று டேரன் சாமே தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணி புதிய சாதனை படைத்தது.

கொல்கத்தாவில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில்  இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி. அந்த அணியின் அதிரடியாக ஆடிய மார்லன் சாமுவேல்ஸ், பட்டைய கிளப்பிய பிராத்வெய்ட் ஆகியோரின் பேட்டிங் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது.

6-வது உலகக்கோப்பை
16 அணிகள் பங்கேற்ற 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 8–ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. இதில் முதல் சுற்றின் முடிவில் 6 அணிகளும், சூப்பர்–10 சுற்று நிறைவில் 6 அணிகளும் வெளியேறின. இதைத் தொடர்ந்து நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும் தோற்கடித்து இறுதி சுற்றை அடைந்தன.

இந்த நிலையில் உலக சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை நேற்று எதிர்கொண்டது – இங்கிலாந்து அணி. இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது.

10-வது முறை

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சாமே தொடர்ந்து 10-வது முறையாக நேற்றும் டாஸ் வெற்றி பெற்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது.

5 ஓவர்களுக்குள் ஜேசன் ராய்(0), ஹேல்ஸ்(1), மோர்கன்(5) ஆகியோரை பத்ரியும், ருஷெலும் வெளியேற்றி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தனர். 4-வது விக்கெட்டுக்கு பட்லர், ரூட் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர்.

இருவரும் 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பட்லர் 36 ரன்களில் வெளியேறினார். அதன்பின் இங்கிலாந்து அணியின் சரிவு தொடங்கியது. ஸ்டோக்ஸ்(13), மொயின் அலி(0) என விரைவாக பெவிலியன் திரும்பியதால் நெருக்கடி அதிகமானது. 84 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 111 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது பரிதவித்தது.

ரூட் அரைசதம்

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும் மறுபுறம் அதிரடியாக ஆடிய ஜோய் ரூட் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவர் 54 ரன்களில்(36பந்து, 7பவுண்டரி) ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த, பிளங்கெட் 4 ரன்னில் வீழ்ந்தார். இங்கிலாந்து அணி கடைசி 27 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. ஜோர்டன் 12 , ராசித் 4 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

விக்கெட் சரிவு
156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் 3 ஓவர்களில் சார்லஸ், கெயில்,சிம்மன்ஸ் விக்கெட்டுகளை பறிகொடுத்து அந்த அணி திணறியது. 4-வது விக்கெட்டுக்கு சாமுவேல்சுடன், பிராவோ நின்று சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். ஸ்கோர் 84 ரன்கள் எட்டியபோது, பிராவோ(25)ரன்னில் வெளியேறினார்.

வெற்றிக்கூட்டணி
அதன்பின் வந்த ருஷெல்(1), சாமே(2) இருவரும் வில்லே வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 7-வது விக்கெட்டுக்கு சாமுவேல்சுடன், பிராத்வெய்ட் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு பாதைக்கு கொண்டு சென்றனர். அதிரடியாக ஆடிய சாமுவேல்ஸ் 47 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டோக் பந்துவீசிய அந்த ஓவரை பிராத்வெய்ட் எதிர்கொண்டார். யாரும் எதிர்பாரா வண்ணம்,  4-வது பந்துகளில் தொடர்ந்து 4 சிக்சர் அடித்து  அணியை வெற்றிபெற வைத்தார் பிராத்வெய்ட்.
பிராத்வெய்ட் 34(10பந்து), சாமுவேல்ஸ் 85ரன்களுடன்(66பந்து)இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் வில்லே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாக்ஸ்மேட்டர்…
3 பிரிவிலும் சாம்பியன்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் சாம்பியன், மகளிர்  டி20 சாம்பியன் ஆகிய இருந்த மேற்கிந்தியத்தீவுகள், இப்போது ஆடவர் பிரிவு  டி20 உலகக்கோப்பைப் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

பரிசுதொகை
சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.3.8 கோடி வழங்கப்படுகிறது. இது கடந்த 2014-ம் ஆண்டு உலகக்கோப்பையைக் காட்டிலும் 86 சதவீதம் அதிகமாகும்.

Leave a Reply