- செய்திகள்

டிராபிக் ராமசாமியால் மதுரையில் பரபரப்பு விளம்பர போர்டுகளை அகற்றினார்…

மதுரை, ஆக. 18- மதுரையில் டிராபிக் ராமசாமி விளம்பர போர்டுகளை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிராபிக் ராமசாமி

சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த ஆய்வு செய்வதாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் நேற்று மதுரை விளக்குத்தூண் பகுதியில் அரசு அனுமதி பெற்று வைக்கப்பட்ட விளம்பர போர்டுகளை உடனடியாக அகற்றுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அங்கிருந்த விளக்குத் தூண் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் அனுமதி பெற்று வைக்கப்பட்டு இருக்கும் விளம்பர போர்டுகளை அகற்ற எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.

அதிகாரிகளுடன் பேச்சு

பின்னர் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு பேசிய டிராபிக் ராமசாமி, உச்சநீதிமன்றத்தில் டிஜிட்டல் போர்டுகள் வைக்க தடை இருக்கும் போது எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வில்லை என்றும், மாநகராட்சி அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.
இதன்பிறகு மாநகராட்சி அதிகாரியிடம் போனில் பேசிய டிராபிக் ராமசாமி, மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அதிகாரி விளம்பர போர்டு வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது என்றும் அதை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இதை தொடர்ந்து உடனடியாக ஜே.சி.பி. வாகனத்துடன் வந்த மாநகராட்சி ஊழியர்கள் விளக்குத்தூண் பகுதியில் இருந்த 2 விளம்பர போர்டுகளையும் அகற்றினார்கள்.
இந்த பணிகளை தனது காமிராவில் வீடியோ காட்சியாக பதிவு செய்த டிராபிக் ராமசாமி இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் விளக்குத் தூண் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply